வசனம் பேசக்கூடாது, செயலில் காட்டவேண்டும் : ஸ்டாலின் மீது அதிமுக அட்டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2022, 9:08 pm
EPS Attack Stalin - Updatenews360
Quick Share

திமுக அரசுக்கு தற்போது தீராத பெரும் தலைவலியாக உருவெடுத்து இருப்பது எது? என்று கேட்டால் மாநிலம் முழுவதும் பரவலாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டுதான்.

தலைவிரித்தாடும் போதைப் பொருள்

இது, இளைய தலைமுறையினர் இடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பெரும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. அது மட்டுமின்றி இந்த சமுதாயத்தையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடும் என்ற கவலையை அனைவரிடமும் ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக கஞ்சா, குட்கா ஹெராயின் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை குறி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. போதைப் பொருட்களை உட்கொள்பவர்கள் போதை தலைக்கேறி கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் துணிச்சலாக ஈடுபடுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

சர்வாதிகாரியாக மாறுவேன்

இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆலோசனை கூட்டம் ஒன்றை சென்னையில் நடத்தினார்.

அதில் அவர் பேசும்போது, “காவல் துறையில் உள்ளவர்கள் தவறு செய்யக்கூடாது என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறேன். சாதாரண தவறுகளுக்கே துணை போகக் கூடாது என்றால் ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் போதைப் பொருள் நடமாட்டத்திற்கு எந்த விதத்திலும் துணை போகக் கூடாது. இதை ஏதோ நான் விளையாட்டாக சொல்லவில்லை. இவர் சாஃப்ட் முதலமைச்சர் என்று யாரும் கருத வேண்டாம். நேர்மையான வர்களுக்குத்தான் நான் சாஃப்ட். தவறு செய்பவர்களுக்கு, குறிப்பாக போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை போகிறவர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன்” என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

அவர் இப்படி ஆவேசமாகப் பேசியதன் மூலம், போலீசாரின் உதவி இல்லாமல் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் இருக்க வாய்ப்பே இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

முதலமைச்சரின் சர்வாதிகாரி பேச்சுக்கு, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் எதிர்வினையாற்றியும் உள்ளன.

வசனத்தை குறைங்க

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் ,
“இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் திமுக அரசின் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன.

இதற்கு முன்னாள் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எல்லாம் நடத்தாமல்தான் காவல் துறைத் தலைவர் ஆப்பரேஷன் கஞ்சா 2.0 என்று அறிவித்தாரா? இந்த அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன? காவல் துறைத் தலைவரின் இந்த அறிவிப்பு வெத்துவேட்டு ஆனதால்தான், இந்த முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தினாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன.

“நாடகமே இந்த உலகம், ஆடுவதோ பொம்மலாட்டம்” என்ற ஒரு பழம்பெரும் திரைப்படப் பாடலை யாரோ ஒருவர் இந்த திமுக அரசின் முதலமைச்சருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் போலும். ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்றுவரை மக்களை ஏமாற்றும் வகையில் தினம் ஒரு அறிவிப்பு, அடிக்கடி குழுக்கள் அமைத்தல் என்று பொம்மலாட்ட நாடகங்களை அரங்கேற்றி வருவது கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

காவல் துறையினர் தினசரி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பிடிப்பதாகவும், கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதாகவும், கடத்திய ஆசாமிகளைக் கைது செய்வதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், வெட்ட வெட்ட முளைப்பதற்கு இது என்ன ஜி பூம்பா தலையா? இந்த முதலமைச்சருக்கு எரிகிற கொள்ளியில் எதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்ற பழமொழி தெரியாதா? கஞ்சா கடத்தலுக்கு மூலக் காரணம் யார்? யாரைப் பிடித்தால் இது குறையும் என்று தெரியாதா? புதிது புதிதாக போதைப் பொருள் வியாபாரிகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகுகிறார்கள், அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை இந்த அரசு ஒப்புக்கொள்கிறதா?

நடனமாடத் தெரியாத ஒருவர், “கூடம் கோணல்” என்று சொல்லுவது போல் தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முடியாத, இந்த கையாலாகாத அரசு போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை என்று நாடகமாடுவதை இத்துடன் கைவிட வேண்டும்.

மேலும் நான் ‘சாப்ட்’ முதலமைச்சர் அல்ல என்றும், சர்வாதிகாரி என்றும், வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு, இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க, ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் கையாண்டு, தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க, காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர், காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி யுள்ளார்.

மதுபானக் கடைகளை மூட வேண்டும்

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, “போதைப்பொருள் நடமாட்டத்துக்கு துணையாக இருப்போர் மீது நடவடிக்கை எடுக்க சா்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளாா். போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளையும் விரிவாக அவா் கூறியுள்ளாா். ஆனால் முதலமைச்சருக்கு மதுபானம்தான் அதிக போதை தருகிறது என்பதை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

தமிழகத்தில் போதைக்கு அடிமையானவா்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் மதுபானத்துக்கு அடிமையானவா்கள் எண்ணிக்கை தான் மிக அதிகம். முதலமைச்சர் குறிப்பிட்ட கொலை, கொள்ளை, பாலியல் தொல்லைகள் ஆகியவற்றுக்கு மூலகாரணம் மதுபானம்தான். எனவே, தமிழக அரசின் மதுபானக் கடைகளை மூடும் முடிவை முதலமைச்சர் உடனடியாக எடுக்க வேண்டும்”என்று கூறி இருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 96 சதவீத வழக்குகளில் குற்றம் இழைத்தவர்கள் எந்த தண்டனையுமின்றி தப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள ஊடக செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

போதைப் பொருட்களை கடத்துபவர்களும், விற்பனை செய்பவர்களும் தண்டிக்கப்படாமல், போதைப் பொருட்களை ஒழிக்க முயல்வது பயனற்ற, வீண் செயலாகவே அமையும்.

சென்னையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த 10-ம் தேதி வரையிலான இரு ஆண்டுகளில், போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 102 வழக்குகளில் அதற்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அவற்றில் 4 வழக்குகளில் மட்டும்தான் மொத்தம் 10 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 98 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இது மிகவும் மோசமான, வேதனையளிக்கும் முன்னுதாரணமாகும்.

இதில் அதிர்ச்சியளிக்கும் இன்னொரு விஷயம் என்னவென்றால் இதற்கு காவல்துறையினரே காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது தான். பல வழக்குகளில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினரே பிறழ்சாட்சியம் அளித்துள்ளனர். இதற்கு காரணமானவர்களை சிறப்பு நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

போதைப்பொருட்கள் குறித்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், குற்றவாளிகள் தப்புவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தல், திறமையான, நேர்மையான அதிகாரிகளை போதைப் பொருள் ஒழிப்பு பணிகளில் அமர்த்துதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தான் போதைப் பொருட்களை ஒழிக்க முடியும்.

எனவே பொறுப்பானவர்களிடம் இந்த பணிகளை ஒப்படைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று ஆலோசனை தெரிவித்து இருக்கிறார்.

விஜயகாந்த் விமர்சனம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருப்பதை வரவேற்கிறேன். இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிறு வயதிலேயே தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். எனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

அதேபோல் மதுபானங்களால் ஏற்படும் போதையை ஒழிக்க தமிழக அரசு முன்வராதது ஏன்? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு டாஸ்மாக் வருமானத்தை கை விட மனம் இல்லாததால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் வாய்மொழி வார்த்தையாக இல்லாமல் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கஞ்சா, மதுபானங்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும். மேலும் போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை” என கேட்டுக்கொண்டு உள்ளார்.

சமூக ஆர்வலர்கள் விமர்சனம்

சமூகநல ஆர்வலர்கள் கூறியதாவது : போதைப் பொருள் எதுவாக இருந்தாலும் அது இந்த சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் உரக்க குரல் கொடுப்பதும் நல்ல விஷயம்தான்.

2015-ம் ஆண்டு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்படும். திமுக பிரமுகர்கள் நடத்தும் மதுபான தொழிற்சாலைகளில் உடனடியாக உற்பத்தியை நிறுத்துவார்கள் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

டாஸ்மாக் பற்றி பேசுவதே கிடையாது

ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம் விதவைகள் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் டாஸ்மாக்தான் என்று அப்போது கனிமொழி விளக்கமும் அளித்திருந்தார். ஆனால், இப்போது அவர் டாஸ்மாக் பற்றி பேசுவதே கிடையாது.

ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் எளிதில் கிடைக்கிறது என்பதற்காக, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விடுவது மாநிலத்தையே போதையின் பாதைக்கு தள்ளிவிடும். தமிழகத்தில் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பத்து பெண்கள் டாஸ்மாக் காரணமாக தினமும் பெரும் பாதிப்பையும், துயரத்தையும் சந்தித்து வருகின்றனர் என்கிறது, ஒரு தகவல்.

போதைப்பொருள், மதுபானம் தடை செய்ய வேண்டும்

முதலமைச்சர் ஸ்டாலினோ ஏழை மற்றும் பின்தங்கிய பெண்கள் பெருமளவில் அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்வதால் மாதத்திற்கு 8 முதல் 12 சதவீதம் வரை வருமானத்தை சேமிக்கின்றனர். இது ஒரு பொருளாதார புரட்சி என்று பெருமிதத்தோடு கூறுகிறார்.

ஆனால் அந்த பெண்களின் கணவர்கள் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதத்தை டாஸ்மாக்கில் வீணடித்து விடுகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். எனவே மதுபானம் உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களும் தமிழகத்தில் தடை செய்யப்படவேண்டும் என்பதே சிறந்த தீர்வாக அமையும்”என்று அந்த சமூகநல ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Views: - 462

0

0