செங்கல்பட்டை அதிர வைத்த இரட்டைப் படுகொலை: ரவுடிகள் 2 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை…அதிரடி காட்டிய போலீசார்..!!

Author: Aarthi Sivakumar
7 January 2022, 9:53 am
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்று நடைபெற்ற இரட்டைப் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு நகரில் நேற்று நிகழ்ந்த இரட்டைப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரில் 2 பேர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் ரவுடிகளைப் பிடிக்க சென்ற போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்ப முயன்றதால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கல்பட்டில் நேற்று கார்த்திக் என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசியும், மகேஷ் என்பவரை அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இந்த இரட்டை கொலை வழக்கில் மறைமலை நகரில் பதுங்கியிருந்த அஜய் என்பவரை 2 கைகள் சிதைந்த நிலையில் தனிப்படை போலீஸ் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய மாமண்டூர் அருகே தினேஷ், மொய்தீன் ஆகிய இரண்டு ரவுடிகளையும் காவல்துறையினர் பிடிக்க முயன்றனர்.

அப்போது, காவல்துறையினர் மீது ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்ப முயன்றனர். இதில் இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ரவுடிகளை நோக்கி சுட்டனர். அதில் தினேஷ்,மொய்தீன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த ரவுடிகளின் உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இருவரின் மீதும் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த இரட்டைக்கொலையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த என்கவுண்டரும் பொதுமக்களை பதற்றமடையச் செய்துள்ளது.

Views: - 311

0

0