நோயாளியின் உயிர்தான் முக்கியம்…டிராஃபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் சமயோஜிதம்: குவியும் பாராட்டு..!!
Author: Aarthi Sivakumar1 November 2021, 5:20 pm
புதுச்சேரி – கடலூர் சாலையில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நபருக்கு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல பரிந்துரைக்கப்பட்டது.
நோயாளியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் 100 அடி சாலையில் இந்திரா சதுக்கம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் நடுவழியில் மாட்டிக்கொண்டது.
உயிருக்கு போராடும் நோயாளியை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஓட்டுநர் பரிதவித்த நேரத்தில், அங்கிருந்த இளைஞர் ஆம்புலன்ஸ் செல்ல தடுப்பு சுவர் அருகே கற்களை வைத்தார்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாலையின் தடுப்புச்சுவரை கடந்துச்சென்று நோயாளியை மருத்துவமனையில் சேர்த்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நோயாளியை காப்பாற்றிய இளைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
0
0