ஆயுதங்களாக மாறும் ட்ரோன்கள்: புதிய வடிவமெடுத்த எதிர்கால யுத்தம்!

Author: Udayaraman
24 July 2021, 10:07 pm
Quick Share

ட்ரோன் அருமையானதொரு அறிவியல் கண்டுப்பிடிப்பு.இன்று திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் படம் எடுக்க மட்டுமின்றி, கூட்டங்களை கண்காணிக்க காவல்துறைக்கும் பயன்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் ட்ரோன்கள் விவசாய, மருத்துவ, உணவு சேவைக்கும் பெரிதும் உதவுகிறது.எந்தவொரு அறிவியல் கண்டுப்பிடிப்பு என்றாலும், அதை பயன்படுத்தும் விதத்தில்தான் நல்லதோ, கெட்டதோ இருக்கிறது என்று கூறுவார்கள்.அது உண்மை என்பதுபோல அண்மைக்காலமாக பயங்கரவாதிகளின் நவீன ஆயுதமாக இந்த ட்ரோன்கள் மாறியுள்ளன. பாகிஸ்தான்,மெக்ஸிகோ, கொலம்பியா, தாய்லாந்து போன்ற பல நாடுகளில் போதைப் பொருள், ஆயுதம் கடத்துபவர்களும் போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி தப்புவதற்கு ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.

நமது நாட்டுக்கு எப்போதும் தலைவலியாக இருந்து வரும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் பாகிஸ்தான் எல்லை பகுதியிலிருந்து, காஷ்மீர் எல்லையோர பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி, கத்துவா பகுதிக்குள் ஊடுருவிய ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். அதிலிருந்து ஒரு செமி ஆட்டோமேட்டிக் கார்பைன் துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த ட்ரோனின் எடை சுமார் 18 கிலோ. அது 5-6 கிலோ எடையைச் சுமந்து பறந்துள்ளது. இந்த ட்ரோனின் பெரும்பாலான பகுதிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.

காஷ்மீரில் தற்போதுள்ள பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு கடுமையான ஆயுத பற்றாக்குறை உள்ளது. அதனால், அவர்களுக்கு ஆயுத சப்ளை செய்யவும், பள்ளத்தாக்கில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஏராளமான பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யவும் சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.ஆனால் நமது ராணுவத்தின் தீவிர கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக, பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் எளிதில் நுழைய முடியவில்லை. இதனால்தான் ட்ரோன்களை பயங்கரவாதிகள் தங்களின் ஆயுதமாக கையில் எடுக்கத் தொடங்கி விட்டனர். ட்ரோன்களில் நிறுவப்பட்டுள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மூலம் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

இந்த துல்லிய கேமராக்கள் மூலம், பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எந்த வழியாக ஊடுருவுவது எளிதாக இருக்கும் என்பதையும் கண்டறிந்து, அதன் பின்னர், அந்த வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவவைக்க சதித்திட்டம் தீட்டுகிறது.இப்படி அதிகரித்து வரும் ட்ரோன்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்க, காஷ்மீர், பஞ்சாப் எல்லையில் நிறுவக்கூடிய மேம்படுத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு சாதனைங்களை வாங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ட்ரோன்களின் ஆபத்துகளைச் சமாளிக்க, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உதவியைப் பெறுவதோடு, வெளிநாட்டிலிருந்தும் ட்ரோன் எதிர்ப்பு சாதனைங்களை அரசாங்கம் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

2 வருடங்களுக்கு முன்பு பஞ்சாப் எல்லைக்குள் ட்ரோன்களைப் பயன்படுத்தி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் ஆயுதங்களை கொண்டு வந்து போட்டனர்.அதன் பிறகு, பயங்கரவாதிகள் ட்ரோன்களைப் பயன்படுத்துவது அபூர்வ நிகழ்வாக இருந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து பாகிஸ்தான் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் ட்ரோன் தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.கடந்த மாதம் 27-ம் தேதி ஜம்மு நகரில் இந்திய விமானப் படை தளத்துக்குள் ஒரு ட்ரோன் மூலம் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலையும் நடத்தினர். அதில் அங்கிருந்த 2 வீரர்கள் காயமும் அடைந்தனர். ஜம்முவில் சர்வதேச எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகள் 10 கிலோ மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைப் பரப்புக்குள் ஊடுருவி இந்திய ராணுவ நிலைகளையும் அலுவலகங்களையும் நோட்டமிடும் விதமாக ட்ரோன்களை அனுப்புகின்றனர்.

சிலநேரம் வெடிகுண்டுகளை வீசுவதற்காக அதை கையாளுகின்றனர். அதை கண்டறிந்து ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்த முயற்சிக்கும்போது அவை வந்த வழியே வேகமாக திரும்பிச் விடுகின்றன. இந்த நிலையில்தான் இந்திய ராணுவ வீரர்கள் ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் கடந்த 23-ந் தேதி அதிகாலை சர்வதேச எல்லைக்கோடுக்கு அப்பாலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஒரு ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அதற்குள் 5 கிலோ எடை கொண்ட வெடி குண்டுகளும் இருப்பது தெரியவந்தது.6 இறக்கைகள் கொண்ட இந்த ட்ரோன் உள்பட இதுவரை பிடிபட்ட பாகிஸ்தான் ட்ரோன்களில் பெரும்பாலானவை சீனத் தயாரிப்புகள்தான். அவை நான்கைந்து கிலோ எடையை சுமந்துகொண்டு 8 கிலோமீட்டர் வரை பறந்து செல்லக்கூடியவை.

இந்த ட்ரோன்கள் ஆயுதங்களையும் குண்டுகளையும் தாங்கி செல்ல முடியும் என்பதால், படைகள் மீது தாக்குதல் நடத்தும் சாத்தியமும் உள்ளது.  இதுபோன்ற ட்ரோன்களின் உதவியுடன், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு படையினரையும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் குண்டுகளால் தாக்க முடியும் என பாதுகாப்பு நிறுவனங்களின் அறிக்கைகள் கூறுகின்றன. இந்த நிலையில்தான் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே, ட்ரோன்கள் மூலம் இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது. ட்ரோன்களால் தடையின்றி வேகமாக பறக்க முடியும், அவற்றை இயக்குவதும் எளிது. எனவே, இவற்றின் கைகளில் பொருட்களைக் கொடுத்து புரோகிராம் செய்தால் போதும்.குறிப்பிட்ட இடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டுத் திரும்பி வந்துவிடும்.

இவற்றின் விலை 5 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இதன் அதிக பட்ச வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டர். அமெரிக்க ராணுவ பயன்பாட்டில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ட்ரோன்களும் உள்ளன. அதிகபட்சமாக 7 கிலோ மீட்டர் உயரத்திற்கு இதனால் பறக்க இயலும்.இன்னும் 10, 15 ஆண்டுகளில் இந்தப் பறக்கும் வாகனங்கள் புத்தக பார்சல் தொடங்கி டீ, காபி, இட்லி, பீசா, மசால், தோசைவரை பலவற்றை வீட்டில் டெலிவரி செய்யும் நிலை ஏற்படும்.சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள ஒரு நோயாளியை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது, போக்குவரத்து நெரிசலால் வழியிலேயே பலர் உயிரிழந்து விடுகின்றனர்.

இதை தவிர்ப்பதற்கும் ட்ரோன்கள் உதவும். உயிருக்குப் போராடும் நோயாளிக்கு உடனடியாக மருந்து, மாத்திரைகளை அனுப்பி வைத்து அவரை காப்பாற்ற முடியும். அதன் பிறகு அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அழைத்து வரலாம். ட்ரோன்கள் பயங்கரவாதிகளின் கைகளில் ஆயுதமாக மாறியிருப்பது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “இது மிகவும் ஆபத்தானது.முன்பெல்லாம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் எல்லை வழியாக ரகசியமாக ஊடுருவி தாக்குவது, வெடிகுண்டுகளை வீசுவது, கார்களில் குண்டு வைப்பது, ராணுவ வாகனங்கள் வரும்போது ஆயுதம் நிரப்பிய வாகனத்தை மோதச் செய்து பெரும் உயிர் சேதம் ஏற்படுத்துவது போன்ற வழிமுறைகளை மட்டுமே கையாண்டு வந்தனர். தற்போது ட்ரோன்களுக்கு மாறியுள்ளனர்.

எதிர்கால யுத்த முறைகளில் இதுவும் கூட ஒன்றாக மாறிவிடும்.இந்த ட்ரோன்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் படையெடுத்தால் நிலைமை இன்னும் மோசமாகும். ராணுவத்தில் ட்ரோன்கள் அழிப்பு பிரிவு ஒன்றும் கூட உருவாகலாம்.ஏனென்றால் ஒரு பயங்கரவாதியை, தாக்குதலுக்கு தயார்படுத்துவதை விட ட்ரோன்களை பயன்படுத்தும்போது செலவு பல மடங்கு மிச்சம் ஆகும். மேலும் தொழில்நுட்பம் பெருகப்பெருக ட்ரோன்களின் செயல்பட்டு திறனும் அதிகரிக்கும். அப்போது அதன் விலையும் இன்னும் மலிவாகி விடும். 500, 1000 ரூபாய் கொடுத்து பொம்மைகள் வாங்குவது போல் ட்ரோன்களை வாங்கிப் பயன்படுத்தும் நிலையும் உருவாகும்.

எனவே இந்திய எல்லைக்குள் ஊடுருவும்போதே அதனை கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பம் நமக்கு உடனடியாகத் தேவை. இப்போது இந்தியாவிடம் சிக்கியுள்ள, பயங்கரவாதிகள் அனுப்பிய ட்ரோன்கள் அத்தனையும் சீன தொழில்நுட்பத்தில் உருவானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ட்ரோன்களால் நன்மைகள் அதிகம் என்றாலும், இதுபோன்ற ஆபத்துகளும் நிறையவே உண்டு. எனவே நமது எல்லைப்பகுதிகளில் ராணுவ பாதுகாப்பிற்கு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மிகவும் அவசியம். நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் மோடி அரசு மிகவும் அக்கறையுடன் இருப்பதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்பலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.

Views: - 153

0

0