தினகரனுக்கு அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி: தத்தளிக்கும் அமமுக…!!

Author: Rajesh
13 April 2022, 8:36 pm
Quick Share

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 32 வயது இளைஞர் சுகேஷ் சந்திரசேகர்.17 வயதிலேயே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு 2010-க்கு பிறகு தில்லாலங்கடி வேலையில் இறங்கினார்.

ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், மலையாளம் என பல மொழிகள் சரளமாக பேசத் தெரிந்த சுகேஷ் சந்திரசேகர், தனக்கு அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி பிரபல தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றிய பண மோசடி புகார்களிலும் சிக்கியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தலைமையில் அதிமுக 2 அணிகளாக பிளவுபட்டது. அப்போது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

இந்த நிலையில்தான், இரட்டை இலையை சசிகலா அணியினருக்கு ஒதுக்கீடு செய்ய தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கும், டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசி முதல் தவணையாக இரண்டு கோடியை டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெறும்போது டெல்லி போலீசார் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரை, கையும் களவுமாக பிடித்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திகார் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக அப்போது டிடிவி தினகரனிடமும் டெல்லி போலீசார் 4 நாட்கள் விசாரணை நடத்தி பிறகு அவரையும் கைது செய்தனர். பின்னர் தினகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே தொழிலதிபர் மனைவி ஒருவரிடம் சுகேஷ் சந்திரசேகர்
மோசடியில் ஈடுபட்டு 200 கோடிக்கும் மேலாக பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சென்னை கானத்தூரில் உள்ள பண்ணை அவருடைய வீட்டில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 83 லட்ச ரூபாய் ரொக்கம், 11 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் உள்பட 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர் மீது ஏற்கனவே 20 பண மோசடி வழக்குகளும் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு மத்திய அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை தற்போது மீண்டும் கைது செய்துள்ளது. பண மோசடி தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் லஞ்ச வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியபோது
திகார் சிறையில் இருந்தவாறே தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலம் ஆனது. இதைத் தொடர்ந்து அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கும் பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகருடைய காதலி லீனா மரியாவிடமும், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில்தான், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக சுகேஷ் சந்திரசேகர் 2 கோடி ரூபாய் முன் பணம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி அவரை டெல்லிக்கு வரவழைத்து மீண்டும் விசாரணை நடத்தினர். அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட கிடுக்குப்பிடி கேள்விகளை அவரிடம் எழுப்பியுள்ளனர். அந்தக் கேள்விகளால் டிடிவி தினகரன் ரொம்பவே திணறிப் போனதாக தெரிகிறது.

இதுகுறித்து டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறும்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

“இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான டிடிவி தினகரன் இப்போதும் ஜாமீனில்தான் வெளியே இருக்கிறார்.

இந்த நிலையில்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் ஒருவரை விடுவிப்பதற்காக அவருடைய மனைவியிடம் 200 கோடி ரூபாயை சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறைக்குள் இருந்தவாறே வாங்கிய மோசடி வழக்கில் வசமாக சிக்கிக் கொண்டார்.

அவரை தங்களது காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தநேரத்தில் இரட்டை இலை வழக்கில் முக்கிய சாட்சியான வக்கீல் கோபிநாத் சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதன் காரணமாக இரட்டை இலையை மீட்பதற்காக அவர் இரண்டு கோடி ரூபாய் வாங்கிய வழக்கு மறுபடியும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. சென்னை கானாத்தூரில் சுகேஷ் சந்திரசேகருக்கு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீட்டை வாங்கிக் கொடுத்ததில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக டிடிவி தினகரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தி இருப்பதற்கும் வாய்ப்புள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்புக்கு பின், சசிகலா ஆதரவாளர்கள் ‘அப்செட்’ அடைந்திருப்பதால், அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கும் அரசியல் ரீதியாக கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கில் தினகரனுக்கு சிறைத் தண்டனை கிடைப்பதற்கும் வாய்ப்பு இருப்பதால் அமமுகவினர் திண்டாட்டத்தில் உள்ளனர். ஏற்கனவே பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசாக இருப்பதற்காக ஜெயில் அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் விசாரணை நடத்திய கர்நாடக காவல்துறையினர் சிறை அதிகாரிகள் மற்றும் சசிகலா உள்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு தீவிரமாக நடந்தால் இன்னும் 6 மாதங்களுக்குள் தீர்ப்பு வந்துவிடும். அதில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை சசிகலாவுக்கு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படி சசிகலாவும், அவருடைய அக்காள் மகன் தினகரனும் ஒரே நேரத்தில் வழக்கு விசாரணைகளில் சிக்கிக் கொண்டிருப்பது அவர்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இரண்டரை சதவீத வாக்கு வங்கியை கொண்டுள்ள அமமுகவினர் மீண்டும் தங்களது தாய்க் கழகமான அதிமுகவிற்கு திரும்பலாம். அல்லது பாஜக, திமுகவை நோக்கி அவர்கள் பயணிக்கலாம். தென் மாவட்டங்கள் ஒரு சிலவற்றில் மட்டும் குறிப்பிட்ட வகுப்பினரை மட்டுமே தொண்டர்களாக கொண்டுள்ள அமமுக விரைவில் அஸ்தமனம் ஆகிவிடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது சசிகலா, டிடிவி தினகரன் இருவரின் அரசியல் வாழ்க்கைக்கு நிரந்தர முற்றுப்புள்ளியும் வைக்கலாம் என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 628

0

0