இந்தியாவில் கொரோனா பரவ தப்லீக் ஜமாத் தான் காரணம் : மத்திய அரசு பகீரங்கக் குற்றச்சாட்டு..!
21 September 2020, 5:29 pmடெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியே காரணம் என்று மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த சூழலில், மார்ச் முதல் வாரத்தில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், எந்தவித சமூக விலகலையும் கடைபிடிக்காமல், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 9 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களில் பெரும்பாலானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநிலங்களவையில் தப்லீக் ஜமாத் மாநாடு குறித்து சிவசேனா எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது :- கொரோனா பேரிடர் காலத்தில் தெப்லீக் ஜமாத்தில் விதிகளை மீறி ஒன்றாகக் கூடியதாக 236 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2,361 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்திருந்த நிலையில், விதிகளை மீறி ஒரே அரங்கிற்குள், முகக்கவசம், சமூக இடைவெளி என எதுவும் கடைபிடிக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடியிருந்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் தப்லீக் ஜமாத்தில் பலரும் கூடியதும் ஒன்றாகும், எனத் தெரிவித்தார்.