10 வயது சிறுமியை காவு வாங்கிய துப்பட்டா…அஜாக்கிரதையால் தலைதுண்டித்து உயிரிழந்த பரிதாபம்: அன்னூரில் சோகம்..!!
Author: Rajesh29 ஜனவரி 2022, 3:59 மணி
கோவை: அன்னூரில் இருசக்கர வாகனத்தில் பின்பக்க சீட்டில் அமர்ந்து வந்த 10 வயது சிறுமியின் துப்பட்டா டயரில் சிக்கியதால் கழுத்து அறுபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள வடக்கலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது 10வயது மகள் தர்ஷனா. அப்பகுதியில் உள்ள அரசுபள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் பக்கத்து வீட்டுகாரரான விக்னேஷ் என்பவர் சிகிச்சைக்காக சிறுமியை அன்னூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அன்னூர் to ஓதி மலை செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்துள்ளார்.
விக்னேஷ் இருசக்கர வாகனத்தினை ஓட்டி வந்த நிலையில் ராம்நகர் என்ற இடத்தில் வாகனம் வந்து கொண்டிருந்த போது சிறுமி அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் மாட்டிக்கொண்டது. துப்பட்டா மாட்டி சிறுமியின் கழுத்து இறுகி தலை தனியாக துண்டித்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததை பார்த்து விக்னேஷ் கண்ணீர் விட்டு கதறி அழுத நிலையில் இது குறித்து அக்கம்பக்கத்தினர் அன்னூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகன சக்கரத்தில் துப்பட்டா சிக்கி சிறுமியின் உயிரை பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, துப்பட்டாவை பாதுகாப்பாக அணிந்து கொள்வதோடு கவனமுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
0
0