ஸ்டாலினைக் கவிழ்க்கிறாரா துரைமுருகன்..? பதவியேற்று 10 நாட்கள் கழித்து வெளியான விசுவாச அறிக்கையால் சந்தேகம்..!

21 September 2020, 5:43 pm
duraimurugan - stalin1 - updatenews360
Quick Share

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் நடப்பேன் என்று பதவியேற்று, பத்து நாட்கள் கழித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென்று விசுவாச அறிக்கை வெளியிட்டிருப்பது கட்சிக்குள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் துரைமுருகனை சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தொடங்கியிருப்பதால்தான் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போன்ற அறிக்கையைத் துரைமுருகன் வெளியிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

துரைமுருகன் அதிமுகவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அதிமுக அரசுடன் பேசிஅவரது மருமகள் சங்கீதா நடத்தும் கே.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை ஒப்பந்ததாரர் பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் திமுக தலைமையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பொதுப்பணித்துறையில் பல்வேறு கட்டடங்கள், பாலங்கள் போன்றவை கட்டப்படும்போது அந்தப் பணிகள் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் வாயிலாக அந்தப் பணிகள் நிறைவேற்றும்போது ஒப்பந்ததாரர்களுக்கு உரிய லாபம் கிடைக்கும்.

மாநில முழுவதும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஒப்பந்தக்காரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு கிரேடு அடிப்படையில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக ஒப்பந்தக்காரர்கள் பதிவு செய்வது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தகுதியான, திறமையுள்ள பல ஒப்பந்தக்காரர்களும் பதிவு செய்வதற்கு விண்ணப்பங்களை அளித்துக் காத்திருக்கின்றனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் துரைமுருகன் மகனும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா பெயரில் இயங்கும் கே.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் ஒப்பந்ததாரர் பட்டியலில் சேர்க்க்பட்டிருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு கட்டடங்களையும் பாலாற்றில் தடுப்பணை கட்டுவது, பாலங்கள் கட்டுவது போன்ற அரசுப்பணிகளுக்கு ஒப்பந்தம் பெறுவதற்காகவே துரைமுருகன் தனது மருமகள் பெயரில் இயங்கும் நிறுவனத்தை ஒப்பந்தக்காரர்கள் பட்டியலில் பதிவு செய்துள்ளார் என்று கருதப்படுகிறது.

திமுகவின் எதிர்க்கட்சியான அதிமுக அரசு நடக்கும்போது துரைமுருகன் எப்படி தனது மருமகள் நிறுவனத்தை ஒப்பந்ததாரர் பட்டியலில் சேர்த்தார் என்று திமுகவினர் திகைத்துப்போயுள்ளனர். அதிமுக அரசுடன் நெருக்கம் பாராட்டியே துரைமுருகன் தனது காரியத்தை சாதித்துக்கொண்டார் என்று உடன்பிறப்புகள் கொதிக்கிறார்கள். தனது வர்த்தக நலன்களுக்காகவும் சொந்த காரணங்களுக்காகவும் அதிமுக அரசை சட்டமன்றத்திலும் துரைமுருகன் கடுமையாகப் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

சட்டமன்றத்திலும் ஸ்டாலினுக்கு சரியான யோசனைகளைச் சொல்வதில்லை என்றும் விவாதங்களில் பெரிதாக ஈடுபாடு காட்டுவதில்லை என்றும் துரைமுருகன் மீது திமுக நிர்வாகிகளும் கடுப்பாக உள்ளனர்.

அண்மையில் விபூதி சித்தர் எனப்படும் ஸ்ரீலஸ்ரீ மஹாமஹா ஆனந்த சித்தரை துரைமுருகனும் அவரது மகன் கதிர் ஆனந்தும் சந்தித்தபோது துரைமுருகன் தமிழ்நாட்டின் உயர்பதவியில் அமர்வார் என்று சித்தர் அருள்வாக்கு வழங்கினார். இதுவும் துரைமுருகனை ஸ்டாலின் குடும்பத்தினர் சந்தேகத்துடன் பார்ப்பதற்குக் காரணமாக இருக்கிறது. ஸ்டாலினே முதலமைச்சர் ஆக முடியாமல் பல ஆண்டுகளாகப் போராடி வரும்போது அந்தப் பதவியை துரைமுருகன் குறிவைக்கிறாரோ என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைவராக இருக்கும்வரை பேராசிரியர் க. அன்பழகன் பொதுச்செயலாளராக இருந்தார். அவர் கருணாநிக்கு மிகவும் நம்பகமானவராகவும் விசுவானமானவராகவும் திகழ்ந்தார். ஆனால், துரைமுருகன் அவ்வாறு இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கருணாநிதியும் அன்பழகனும் சமகால அரசியல்வாதிகள். ஆனால், துரைமுருகன் ஸ்டாலின் அரசியலுக்கும் வருவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே சட்டமன்ற உறுப்பினரானவர்.

இந்நிலையில், ஸ்டாலினுக்குத் தான் விசுவாசமாக இருப்பேன் என்று காட்டும் வகையில் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டிருப்பது பலரது சந்தேகங்களை வலிமைப்படுத்துவதாக அமைந்துள்ளது. யாரும் எப்போதும் ‘அமைதிப்படை அமாவாசை’ ஆகலாம் என்பதுதானே அரசியல்.

Views: - 6

0

0