முதலமைச்சர் ஸ்டாலின் நீடூழி வாழ சிறப்பு யாகம்… அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு..!!

Author: Babu Lakshmanan
7 March 2023, 2:07 pm
Quick Share

மயிலாடுதுறை : அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலினுக்காக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டார்.

மயிலாடுதுறை – தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அட்டவிரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதால், இங்கு 60,70,80, 90 மற்றும் 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு யாகங்கள் செய்து அம்பாளை வழிபட்டால் நீண்டு ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை புரிந்தார். அவருக்கு திமுகவினர் வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து, கோவிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின், கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜைகளை செய்தார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தியடைந்ததையடுத்து அவர் நூற்றுக்கால் மண்டபத்தில், அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை நடத்தினார். ஹோமம் நடக்கும் மண்டப வளாகத்தில் பக்தர்கள், பொதுமக்கள் என யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார். முதலமைச்சர் ஸ்டாலின் மனைவியின் வருகையையொட்டி கோவில் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Views: - 316

0

0