ஒரு ஊர்ல 2 ஆடு.. அப்படியே ஒரு நரி..! எடப்பாடி சொன்ன குட்டிக்கதை..! வைரலோ வைரல்..!

2 March 2020, 3:12 pm
Quick Share

ராமநாதபுரம்: மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டி கதை வைரலாகி உள்ளது.

ராமநாதபுரத்தில் ரூ.345 கோடியில் கட்டப்படும் புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மருத்துவ கல்லூரி கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். அத்துடன் பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.474.30 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளையும், முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்து 21 ஆயிரத்து 105 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் விழாவில் அவர் பேசிய போது, ராமநாதபுரத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழுகின்றனர் என்றார். அமைதி பூங்கா மாநிலம் தமிழகம் தான், மத சார்பின்மையை அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்படுவதாக குறிப்பிட்டார்.

ஒற்றுமையுடன் இருந்தால் அனைவருக்கும் வாழ்வு என்பதை உணர்த்தும் வகையில், ஒரு குடடிக் கதையை சொல்லி இருக்கிறார். அந்த கதை தான் இப்போது வைரலோ வைரல்.

கதை இதுதான்: ஒரு காட்டிற்கு அருகில் இருந்த ஊரில், இரண்டு ஆடுகள் தோழமையுடன் அமைதியாக வாழ்ந்து வந்தன. இந்த ஆடுகளின் ரத்தத்தை ருசிக்க விரும்பிய ஒரு நரி, சில நாட்கள் அந்த ஆடுகளை நோட்டமிட்டு வந்தது.

அந்த ஆடுகள் எப்போது பிரிந்து தனியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நரி, ஒரு நாள் தனியாக இருந்த அதில் ஒரு ஆட்டிடம் சென்று, நீயும், உன் நண்பனும் உணவு உண்ண நீ ஒருவனே கஷ்டப்படுகிறாய்; மற்றொரு ஆடு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

உனக்கு கஷ்டமாக இல்லையா? என்று கேட்டு, அந்த ஆட்டின் மனதில் விஷமத்தை உண்டாக்கியது. இதே போன்று மற்றொரு ஆட்டிடமும் சென்று இதே எண்ணத்தை கூறியது. ஒரு கட்டத்தில் அந்த ஆடுகளின் மனதில் தாம் தான் கஷ்டப்படுகிறோம் என்ற எண்ணம் தோன்றவே, 2ஆடுகளும் ஒரு நாள் சண்டையிட்டுக்கொண்டன.

பின்னர் அவை மிகவும் சோர்வடைந்து ஓரத்தில் ஒதுங்கி உட்கார்ந்து கொண்டன. இதை கவனிக்காமல், 2 ஆடுகளும் அங்கிருந்து சென்று விட்டன என்று எண்ணிய அந்த நரி, அங்கு சிந்தி இருந்த ரத்தத்தை ருசித்துக் கொண்டிருந்தது.

இதை இரண்டு ஆடுகளும் பார்த்து விட்டன. பின்னர் அவ்விரண்டு ஆடுகளும் ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டபோதுதான், நரியின் விஷமப்பிரச்சாரம், அந்த ஆடுகளுக்கு தெரிய வந்தது.

இதனால் விழித்துக்கொண்ட அந்த ஆடுகள் ஒரு திட்டத்துடன் மீண்டும் சண்டையிடுவது போல் அங்கு வந்து மோதிக்கொள்ள தயார் ஆயின. அந்த நேரத்தில் ஏதோ சமாதானம் செய்ய வந்தது போல் அங்கு வந்த நரியை, 2டு ஆடுகளும் சேர்ந்து முட்டித்தள்ளி விரட்டியடித்து அந்த நரிக்கு பாடம் புகட்டின.

அதேபோல் மக்களிடையே பிளவு ஏற்படுத்திட யார் முயன்றாலும், இந்த அரசின் முயற்சிகளாலும், உங்களது ஒத்துழைப்பினாலும், அது முறியடிக்கப்படும். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை பின்பற்றி, தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழும் என்று பேசினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.