அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெ. பல்கலை.,யை மூட முயற்சி : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
26 August 2021, 3:34 pm
eps - updatenews360
Quick Share

சென்னை : அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரின் விவாதத்தின் போது, விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது,”தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் அதே பெயரில் இருந்திருக்காது,’ எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழக அரசின் இந்த செயலைக் கண்டித்து சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக ஜெயலலிதாவை சிறப்பிக்கும் வகையில், விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். துணைவேந்தர், சிண்டிகேட் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டனர்.

ஜெயலலிதாவின் பெயரை தாங்கிக் கொள்ள முடியாததால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு, ஜெயலலிதா பல்கலைகழகம் இணைக்கப்படுகிறது. இது நிச்சயம் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். ஏழை எளியோர்கள் குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கும் அம்மா உணவகத்தையே மூடுவேன் என சொல்வது ஏழை மக்களை வஞ்சிப்பதாகதான் தெரிகிறது, எனக் கூறினார்.

Views: - 276

0

0