ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்… மகளிருக்கு மாதம் ரூ.1,500 : மகளிர் தினத்தில் எடப்பாடியார் அதிரடி அறிவிப்பு

8 March 2021, 8:09 pm
EPS OPS - Updatenews360
Quick Share

சென்னை : மகளிர் தினத்தையொட்டி அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக மகளிருக்கான 2 திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 12ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, நேற்றைய தினம் திமுக தலைவர் தங்களது கட்சியின் வாக்குறுதிகள் சிலவற்றை திருச்சி மாநாட்டில் வெளியிட்டார். இதனை நடிகர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய இரு அறிவிப்பை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

அதாவது, மகளிருக்கான திட்டமாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அவர் அறிவித்தார். மேலும், குடும்ப தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது :- எங்களுடைய தேர்தல் அறிக்கையில் மகளிருக்கான மேம்பாட்டு திட்டங்களை நிறைய இடம்பெற்றுள்ளன. இன்று மகளிர் தினம் என்பதால், மகளிருக்கான முக்கிய இரு திட்டங்களை மட்டும் தற்போது வெளியிடுகிறோம். திருச்சி மாநாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை என ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், அது எங்களுடைய திட்டமாகும். எங்களது தேர்தல் அறிக்கையில் கசிந்த ஒருசில தகவல்களையே நேற்று ஸ்டாலின், தனது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதை போன்றே, இந்தத் தேர்தலில் வெற்றி பெறும். அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் வந்தால், அவர்களை இணைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும், என்றார்.

தமிழகத்தில் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், எதிர்கட்சியினர் அதனை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால், குடும்பங்களின் துயரை துடைக்கும் விதமாக, இலவச சிலிண்டரை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார் என அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

இது வெறும் டிரெய்லர்தான் என்று சொல்லும் அளவிற்கு வெறும் இரண்டே வாக்குறுதியில் தாய்மார்களின் ஆதரவை எடப்பாடியார் பெற்று விட்டதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

Views: - 25

0

0