புண்ணுக்கு புனுகு பூசும் வேலை வேண்டாம்… அதிகாரியை தாக்கிய திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்க : இபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
29 January 2022, 10:44 am
Quick Share

சென்னை ; தொடர்ந்து அரசு அலுவலர்களையும்‌, காவல்‌ துறையினரையும்‌ மிரட்டும்‌ அராஜகப்‌ போக்கை உடனே நிறுத்த வேண்டும் என்று அரசு அதிகாரியை திமுக எம்எல்ஏ தாக்கிய சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, தமிழக மக்களின்‌ காதுகளில்‌ பூ சுற்றி ஆட்சிக்கு வந்தது முதல்‌ தி.மு.க-வினரின்‌ அட்டகாசம்‌ எல்லை மீறிப்‌ போயுள்ளது. காவல்‌ துறையினரையும்‌, அரசு அதிகாரிகளையும்‌ மற்றும்‌ பொதுமக்களையும்‌ மிரட்டுவதும்‌, சமூக விரோதச்‌ செயல்களில்‌ ஈடுபடுவதும்‌ அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது.

ரேஷன்‌ கடைகளில்‌ தலையீடு; சட்ட விரோதமாக மணல்‌ அள்ளும்போது தடுக்கும்‌ வருவாய்‌ மற்றும்‌ காவல்துறை அதிகாரிகளைத்‌ தாக்குவது; செய்யாத ஊரக வளர்ச்சிப்‌ பணிகளுக்கு பில்‌ பாஸ்‌ செய்யுமாறு உள்ளாட்சித்‌ துறை அதிகாரிகளை மிரட்டுவது; நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ தலையீடு; விசாரணைக்கு அழைத்துச்‌ செல்லும்‌ குற்றம்‌ சாட்டப்பட்ட நபர்களை விடுவிக்க காவல்‌ நிலையத்திற்கு கும்பலாகச்‌ சென்று பணியில்‌ இருக்கும்‌ காவலர்களை மிரட்டி, அவர்களை மீட்பது சாலை மற்றும்‌ கட்டடப்‌ பணிகளை மேற்கொள்ளும்‌ ஒப்பந்ததாரர்களை மிரட்டுவது; பணி மேற்பார்வையிடும்‌ பொறியாளர்களை மிரட்டுவது என்று, அனைத்துத்‌ துறைகளிலும்‌ தி.மு.க-வினரின்‌ சட்ட விரோதச்‌ செயல்கள்‌ குறித்த செய்திகள்‌ நாள்தோறும்‌ நாளிதழ்களிலும்‌, ஊடகங்களிலும்‌ வெளிவருகின்றன.

நேற்றைய (28.1.2022) ஆங்கில நாளேடு ஒன்றில்‌, திருவொற்றியூர்‌ தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்‌ குறித்த செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. கடந்த புதன்‌ கிழமை (26-ஆம்‌ தேதி) இரவு மாநகராட்சி ஒப்பந்ததாரர்‌, திருவொற்றியூர்‌ பகுதியில்‌ உள்ள நடராஜன்‌ தோட்டம்‌ என்ற இடத்தில்‌ சாலை போடும்‌ பணியில்‌ ஈடுபட்டு வந்துள்ளார்‌. சாலை போடும்‌ பணியை மாநகராட்சி உதவிப்‌ பொறியாளர்‌ மேற்பார்வை செய்கிறார்‌. அந்த சமயத்தில்‌, ஒப்பந்ததாரர்‌ தன்னை வந்து முறைப்படி பார்க்காததால்‌ ஆத்திரமடைந்த திருவொற்றியூர்‌ தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்‌ தனது அடியாட்களுடன்‌ சென்று சாலைப்‌ பணிகளை நிறுத்தியுள்ளார்‌. சாலை போடும்‌ பணியை மேற்பார்வை செய்த சென்னை மாநகராட்சி உதவிப்‌ பொறியாளரையும்‌, பணியாளர்களையும்‌ மிருகத்தனமாகத்‌ தாக்கி விரட்டியுள்ளார்‌ என்று அந்தப்‌ பத்திரிகையில்‌ செய்தி வெளிவந்துள்ளது.

மேலும்‌, சாலை போடும்‌ பணியில்‌ ஈடுபடுத்தப்பட்ட தார்‌, ஜல்லி கலவை இயந்திரங்கள்‌ மற்றும்‌ வாகனங்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதாகவும்‌, அடியாட்களால்‌ அடித்து உதைக்கப்பட்ட உதவிப்‌ பொறியாளரை மிரட்டி, காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ செய்யவிடாமல்‌ செய்திருக்கிறார்‌, அந்த ஆளும்‌ கட்சி திருவொற்றியூர்‌ தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ என்று பத்திரிகைச்‌ செய்தி விளக்கமாகத்‌ தெரிவித்துள்ளது.

இந்த அடாவடி மற்றும்‌ அராஜகம்‌ குறித்து ஆங்கிலப்‌ பத்திரிகை செய்தியாளர்‌, சென்னை வடக்கு மண்டல மாநகராட்சி துணை ஆணையாளரிடம்‌ கேட்டதற்கு, இந்த சம்பவம்‌ குறித்து தமக்கு வாய்மொழியாக புகார்‌ வந்ததாகவும்‌, அது குறித்து விசாரிப்பதாகவும்‌ அந்த அதிகாரி பதில்‌ அளித்துள்ளார்‌. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரிடம்‌ இந்நிகழ்வு குறித்து கேட்டபோது, முறைப்படி சாலை போடப்படாததை தமது கட்சிக்காரர்கள்‌ போய்‌ கேட்டதாகவும்‌, தான்‌ அங்கு போகவில்லை என்று மறுத்துக்‌ கூறியதாகவும்‌, நாளிதழ்‌ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளும்‌ திமுக சட்டமன்ற உறுப்பினரின்‌ அடாவடி அராஜகம்‌ பொது வெளியில்‌ மக்களை சென்றடைந்ததை அறிந்த தி.மு.க. தலைமை, வேறு வழியின்றி அந்த சட்டமன்ற உறுப்பினரை, திருவொற்றியூர்‌ பகுதி திமுக செயலாளர்‌ பொறுப்பில்‌ இருந்து நீக்கி இருப்பதாக நேற்றைய (28.1.2022) முரசொலி நாளிதழ்‌ மூலம்‌ அறிவித்துள்ளது, இந்த விடியா அரசின்‌ இரட்டை வேடத்தைக்‌ காட்டுகிறது.

ஆளும்‌ கட்சி எம்‌.எல்‌.ஏ, அராஜகத்தில்‌ ஈடுபட்டுள்ளார்‌ என்று வெட்ட வெளிச்சமாகத்‌ தெரிந்த பின்னும்‌, அவரின்‌ கட்சிப்‌ பொறுப்பை மட்டும்‌ பறித்துவிட்டு, வழக்குப்‌ பதிவு செய்யாதது ஏன்‌? ஏற்கெனவே திருவொற்றியூரில்‌ மீனவக்‌ குடும்பங்களின்‌ மீது தாக்குதல்‌ நடத்தியதாக இவர்கள்‌ மீது அப்பகுதி மக்கள்‌ ஊடகங்களில்‌ பேட்டி அளித்துள்ளனர்‌. இதுவரை தவறு இழைத்தவர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

புண்ணுக்குப்‌ புனுகு பூசும்‌ வேலையையும்‌, கண்‌ துடைப்பு நடவடிக்கையையும்‌, இந்த விடியா அரசு உடனடியாகக்‌ கைவிட வேண்டும்‌. தாக்குதலுக்கு உள்ளான மாநகராட்சி உதவிப்‌ பொறியாளர்‌ மற்றும்‌ சாலை போடும்‌ பணியில்‌ ஈடுபட்ட ஊழியர்களிடம்‌ முறைப்படி புகாரினைப்‌ பெற்று, அவர்களை மிருகத்தனமாகத்‌ தாக்கிய திருவொற்றியூர்‌ தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்‌ மீதும்‌, மற்றும்‌ அவரது ஆதரவு ரவுடிகள்‌ மீதும்‌ வழக்குப்‌ பதிவு செய்ய வேண்டும்‌. ஆளும்‌ தி.மு.க-வினரின்‌ அராஜகத்தால்‌ உறைந்து போயுள்ள அரசு துறையைச்‌ சேர்ந்தவர்கள்‌, காவல்‌ துறையைச்‌ சேர்ந்தவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ இது போன்று தாக்குதலுக்கு உள்ளாகும்போது, பத்திரிகை, ஊடகங்கள்‌ மற்றும்‌ சமூக ஊடகங்களில்‌ அவற்றைத்‌ தெரிவிப்பதோடு, தைரியமாக காவல்‌ துறையினரிடமும்‌ புகார்‌ அளிக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

அரசு ஊழியரை பணி செய்யவிடாமல்‌ தடுத்த திமுக சட்டமன்ற உறுப்பினர்‌ மற்றும்‌ அவரது ஆதரவாளர்கள்‌ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

  • DMK பெரியார் சிலைக்கு மரியாதை அளிக்க வந்த விஜய்.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!!
  • Views: - 2150

    0

    0