கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
29 June 2021, 3:43 pm
Quick Share

கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் மற்றும் குமாஸ்தாக்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- “சட்டம்‌ என்பது ஒரு இருட்டறை -அதில்‌ வழக்கறிஞர்களின்‌ வாதம்‌ ஒரு விளக்கு” என்றார்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌. இவ்வாறு வெளிச்ச விளக்குகளாக தங்கள்‌ வாதங்களை நீதிமன்றங்களில்‌ எடுத்து வைத்து, நீதி கிடைத்திட அயராது போராடும்‌ அந்த வழக்கறிஞர்‌ சமுதாயத்தைச்‌ சார்ந்த பெரும்பான்மையோரின்‌ பொருளாதார நிலை பொதுவாக பிரகாசமாய்‌ இருப்பதில்லை.

அப்படிப்பட்ட வழக்கறிஞர்களின்‌ வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்த மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ ஆட்சிக்‌ காலங்களிலும்‌, அவரைத்‌ தொடர்ந்து வந்த அம்மாவின்‌ அரசாலும்‌ பல்வேறு நலத்‌ திட்டங்கள்‌ அறிவித்து செயல்படுத்தப்பட்டன.

வழக்கறிஞர்கள்‌ சேமநல நிதி ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டது.
1000 இளம்‌ வழக்கறிஞர்களுக்கு மாதம்‌ ரூ. 3,000/- உதவித்‌ தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கறிஞர்கள்‌ சங்கங்களில்‌ புதிய நூலகம்‌ அமைப்பதற்கு ஒரு கோடி ரூபாய்‌ வைப்புத்‌ தொகையாக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்‌நாடு முழுவதும்‌ 7 அரசு சட்டக்‌ கல்லூரிகள்‌ புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தில்‌ தமிழ்‌நாடு தேசிய சட்டப்‌ பள்ளி என்ற (சட்டப்‌ பள்ளிகள்‌) திறக்கப்பட்டது.
உலகத்‌ தரத்தில்‌ சென்னை தரமணியில்‌ ரூ. 100 கோடி செலவில்‌ புதிய டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகம்‌ –
அமைக்கப்பட்டது.

இவ்வாறு அரசின்‌ சார்பில்‌ புதிய சட்டக்‌ கல்லூரிகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ அமைக்கப்பட்டதால்‌, சட்டம்‌ பயில வேண்டும்‌ என்று ஆர்வம்‌/ கொள்கையோடு இருக்கும்‌ ஏழை, எளிய மாணவர்களின்‌ கனவு நனவானதோடு, தரமான சட்டக்‌ கல்வியினை தமிழக மாணவர்களுக்கு வழங்கிய அரசு, அம்மாவின்‌ அரசாகும்‌.

இதனால்‌ தமிழகத்தில்‌ திறமையான இளம்‌ வழக்கறிஞர்கள்‌ நீதிமன்றப்‌ பணிகளில்‌ ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா பேரிடர்‌ காலத்தில்‌, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீதிமன்றங்களில்‌ பெரும்பாலான நாட்கள்‌ காணொலி வாயிலாக மட்டும்‌ வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததால்‌, நீதிமன்றத்தில்‌ நேரடி விசாரணை நடக்கும்போது உள்ள நிலை இல்லை. அதாவது, சீனியர்‌ வழக்கறிஞர்களின்‌ வாதத்‌ திறமைகளை நேரில்‌ பார்த்தல்‌, வாதி, பிரதிவாதிகளிடம்‌ நேரடியாகப்‌ பேசி அவர்களின்‌ குறைகளை தெளிவாக கேட்கக்கூடிய நிலைமை போன்ற பல நேரடி பயிற்சிகளைப்‌ பெற இயலாத நிலை தற்போது உள்ளது.

எனவே, பெரும்பாலான வழக்கறிஞர்கள்‌ அனுபவம்‌ மற்றும்‌ பொருளாதார சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்‌. வழக்கறிஞர்கள்‌ நமது நாட்டின்‌, நமது சட்டத்தின்‌, நமது சமுதாயத்தின்‌ தூண்கள்‌. உண்மை நிலைகளை நீதியின்‌ முன்‌ எடுத்து வைக்கும்‌ வெளிச்ச விளக்குகள்‌. கடந்த பிப்ரவரி மாதம்‌ 2021 சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடரின்‌ போது, கொரோனா பேரிடர்‌ காலத்தில்‌ வாழ்விழந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள்‌ தங்களுக்கு உதவி அளிக்கக்‌ கோரி மனுக்கள்‌ அளித்திருந்தனர்‌.

குறிப்பாக, தனியார்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌, தனியார்‌ பேருந்துகள்‌, ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள்‌, இளம்‌ வழக்கறிஞர்கள்‌ மற்றும்‌ பார்‌ கவுன்சிலால்‌ பரிந்துரைக்கப்படும்‌ உதவி கோரும்‌ வழக்கறிஞர்கள்‌, வழக்கறிஞர்களின்‌ அலுவலகங்களில்‌ பணிபுரியும்‌ குமாஸ்தாக்கள்‌ என்று கொரோனா பேரிடர்‌ காலத்தில்‌ பொருளாதாரம்‌ பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பிரிவினர்‌ என்னிடம்‌ அரசின்‌ உதவி கோரி மனுக்கள்‌ அளித்தனர்‌. இப்படி, கொரோனா பேரிடர்‌ காலத்தில்‌ அதிகம்‌ பாதித்த பிரிவினருக்கு கொரோனா சிறப்பு நிதி உதவி அறிவிப்பினை சட்டசபையில்‌ நான்‌ அறிவிக்க இருந்தேன்‌.

ஆனால்‌, எதிர்பாராத விதமாக தேர்தல்‌ தேதி அறிவித்தபடியால்‌ மக்கள்‌ நலத்‌ திட்டங்கள்‌ பெரும்பாலானவற்றை சட்டமன்றத்தில்‌ என்னால்‌ அறிவிக்க இயலாமல்‌ போய்விட்டது. தற்போதைய தி.மு.க. அரசு, மேலே குறிப்பிடப்பட்டவர்களின்‌ நிலையை உணர்ந்து இதுவரை எந்தவிதமான நலத்திட்ட உதவிகளையும்‌ அறிவிக்கவில்லை. குறிப்பாக, இளம்‌ வழக்கறிஞர்‌ சமுதாயத்தினருக்கு கொரோனா பேரிடர்‌ சிறப்பு நலத்‌ திட்ட உதவிகள்‌ வழங்காதது மிகுந்த எமாற்றத்தையும்‌, வருத்தத்தையும்‌ ஏற்படுத்தியள்ளது.

எனவே, தமிழ்‌ நாடு அரசு முதற்கட்டமாக, கொரோனா பேரிடர்‌ காலத்தில்‌ நலிவடைந்த நிலையில்‌ உள்ள வழக்கறிஞர்களுக்கும்‌ வழக்கறிஞர்களின்‌ குமாஸ்தாக்களுக்கும்‌ உடனடியாக கொரோனா நிவாரண நிதியும்‌, வாழ்வாதார நிதியும்‌ வழங்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌. மேலும்‌, கொரோனா நோய்‌ தொற்றுக்குப்‌ பலியான வழக்கறிஞர்களின்‌ குடும்பங்களுக்கு தலா 50 லட்சம்‌ ரூபாய்‌ நிதியுதவி வழங்க வேண்டும்‌ என்றும்‌ தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 230

0

0