எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வகுத்த தேர்தல் வெற்றி சூத்திரம் : எடப்பாடியாரின் புதிய அணுகுமுறை!!

25 March 2021, 10:01 am
mgr - updatenews360
Quick Share

தமிழக தேர்தல் களம் மிகவும் விசித்திரமானது, அரசியல்வாதிகள் ஒரு கணக்கு போட்டால் வாக்காளர்கள் வேறு ஒரு மாதிரியாக கணக்கை மாற்றி எழுதி தீர்ப்பு வழங்குவார்கள்.

மக்களின் இந்த மனநிலையை மாறுபட்ட சிந்தனையை யார் சரியாக புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள்தான் அழியாத புகழையும் பெறுகின்றனர். வரலாற்றிலும் இடம் பிடிக்கின்றனர்.

கட்சியின் கணக்கு வழக்கு விவரங்களை வெளிப்படையாக கேட்டதற்காக 1972-ம் ஆண்டு திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டார். பின்னாளில், அவர் விஸ்வரூபம் எடுப்பார் என்று அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.

1973-ல் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது, “அரசியலில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவது பொருந்தாது. இதை வைத்தே எதையும் தீர்மானிக்க முடியாது. பொதுத் தேர்தல்தான் முடிவு செய்யும்” எனக் கூறி எம்ஜிஆரின் வெற்றியை அப்போது கருணாநிதி ஏற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை அன்று அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.

அதேநேரம் 1977-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் அதை உறுதி செய்வதாகவும் இருந்தது. அந்தத் தேர்தலில் அதிமுக சார்பில்
200 வேட்பாளர்களை எம்ஜிஆர் களமிறக்கினார். அவர்களில் 130 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தனைக்கும் அந்தத் தேர்தலில் தான் முதன்முதலாக இரட்டை இலை சின்னம் மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் திமுகவோ அதற்கு முன்பாகவே 3 தேர்தல்களில் உதயசூரியன் சின்னத்தால் மிகவும் பிரபலமாகி இருந்தது.
ஆனால் ஒரே தேர்தலில் இரட்டை இலை சின்னம் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் ஒரு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தியது.

இந்த தேர்தலில் ஒரு விசித்திரம் என்னவென்றால் தாராபுரம் தொகுதிக்கு அய்யாசாமி என்பவரை முதலில் எம்ஜிஆர் வேட்பாளராக அறிவித்தார். அவருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டு விட்டது. கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டார். கால அவகாசம் கடந்து விட்டதால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான பாலகிருஷ்ணன் சிங்கம் சின்னத்தில் போட்டியிட வேண்டியதாகிவிட்டது.
முதலில் அறிவிக்கப்பட்ட அய்யாசாமியின் பெயரும் இரட்டை இலைச் சின்னத்துடன் வாக்கு சீட்டில் இடம்பெற்றுவிட்டது.

admk leaf - updatenews360

எம்ஜிஆரும் இந்த தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது இங்கு இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம். சிங்கம் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் மிகவும் விசித்திரமாக இருந்தது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் வெற்றி பெறாமல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அய்யாசாமி சுமார்
2600 ஓட்டு வித்தியாசத்தில் 2-வதாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் சிவலிங்கத்தை தோற்கடித்தார். பாலகிருஷ்ணன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அதாவது எம்ஜிஆரின் வேண்டுகோளையும் மீறி தாராபுரத்தில் இரட்டை இலை வெற்றி வாகை சூடியது. தமிழகம் முழுவதும் இரண்டு விரல்களை காண்பித்து இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று எம்ஜிஆர் பிரச்சாரம் செய்து வந்ததால் அது தாராபுரம் வாக்காளர்களின் மனதில் அப்படியே பதிந்துபோய் விட்டால்தான் இரட்டை இலையில் போட்டியிட்ட அதிமுகவின் அதிகாரபூர்வமற்ற வேட்பாளர் வெற்றியும் பெற்றுவிட்டார்.

இத்தனைக்கும் அய்யாசாமி வேட்புமனு தாக்கல் செய்ததோடு சரி. எம்ஜிஆரின் வேண்டுகோளை ஏற்று பிரச்சாரத்திற்கு செல்லவே இல்லை. இதுதான் இரட்டை இலையின் மகிமை.

அதாவது, வாக்காளர்கள் ஒன்றைத் தீர்மானித்துவிட்டால் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

எம்ஜிஆரின் மறைவுக்கு பின்பு, அதிமுகவை வழிநடத்திய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் 39 ஆண்டுகளுக்கு பின்பு எம்ஜிஆர் எடுத்த அதே அஸ்திரத்தை 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கையிலெடுத்தார். சிறு சிறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு 234 தொகுதிகளிலும் அனைவரையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்தார். அதிமுகவிலிருந்து மட்டும் 227 பேர் போட்டியிட்டனர். திமுக தலைவர் கருணாநிதி அமைத்த மெகா கூட்டணியை இரட்டை இலை வீழ்த்தியது. 136 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

அதாவது மிக அதிகமான தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் போதெல்லாம் அதிமுகவே வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

இப்படி அதிக தொகுதிகளில் போட்டி, அதிக இடங்களில் வெற்றி என்று எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கையாண்ட தேர்தல் வெற்றி சூத்திரத்தைத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது கையில் எடுத்திருக்கிறார்.

எம்ஜிஆர் 200 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தினார். ஜெயலலிதா இன்னும் ஒருபடி மேலே சென்று 234 இடங்களிலும் போட்டியிட்டார். இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 179 தொகுதிகளில் அதிமுக சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். இது தவிர தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 7 சிறு சிறு கட்சிகள் 12 தொகுதிகளில் இரட்டை இலையிலேயே போட்டியிடுகின்றன.

அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் 10-வது சட்டப்பேரவை தேர்தல் இது. இதில் 3-வது முறையாக இரட்டை இலையில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத் தக்கது. மொத்தம் 191பேர் இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார்கள்.

இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையாண்ட அணுகுமுறை அரசியல் வல்லுநர்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. “பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது, அதிமுகவின் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் பாஜகவுக்கு
20 சீட்களை மட்டுமே ஒதுக்கி சம்மதிக்க வைத்தது என இன்று அரசியல் சதுரங்க ஆட்டத்தில் காய்களை அருமையாக நகர்த்தி வருகிறார், எடப்பாடி பழனிச்சாமி. அவருடைய இந்த தன்னம்பிக்கை, கடின உழைப்பு, தீவிரப் பிரச்சாரம் தேர்தலில் அதிமுகவை தொடர்ந்து மூன்றாவது முறையாக அரியணையில் அமர வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Views: - 19

2

0