கோ பேக் மோடி-னு சொல்லிவிட்டு… இப்ப டெல்லி செல்லும் மர்மம் என்ன..? விளக்குவாரா ஸ்டாலின்… இபிஎஸ் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
31 March 2022, 5:47 pm
Quick Share

சென்னை: ‛கோ பேக் மோடி’ என்று கருப்பு பலூன் பறக்கவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது டில்லி பயணம் மேற்கொண்டுள்ள மர்மத்தை விளக்குவாரா என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் துபாய்க்கு இன்பச் சுற்றுலா மேற்கொண்டார். கடந்த எட்டு மாதமாக துபாயில் நடைபெற்று வந்த கண்காட்சி முடிய 6 நாட்களே இருந்த நிலையில், தமிழக மக்களின் வரிப் பணத்தில் பெருஞ்செலவில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கை மார்ச் 24ல் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் சிறு வணிகர்கள் நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று ஆட்சியில் இல்லாதபோது ஆர்பாட்டம் செய்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், முதல்வரான உடன், தமிழக வணிகர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழகத்திற்கு அன்னிய முதலீடுகளை கொண்டு வரும் வகையிலான அரசு முறைப் பயணம் என்று தம்பட்டம் அடித்தார். அரசு முறைப் பயணம் என்றால் தனி விமானத்தில் குடும்பத்தோடு சென்றது ஏன்? எனக் கேள்வி எழுப்பினேன். ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு, தனியார் விமானச் செலவை திமுக ஏற்றதாக அறிக்கை விட்டு மழுப்பினார். திமுக செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் அரசு அதிகாரிகள் சென்றது சட்ட விரோதம் என்று மத்திய அரசுக்கு புகார்கள் போயிருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு பறந்திருக்கிறார்.

ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றாரா? அல்லது முதலீடு செய்ய துபாய் சென்றாரா? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பினார்கள். ஒரு முதல்வரின் வெளிநாட்டு பயண நிகழ்ச்சிகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொள்ளாமல், மருமகனும், மகனும் செய்தது ஏன் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டது. கடந்த 43 ஆண்டுகளுக்கு முன், தன் தந்தை கருணாநிதி, அன்றைய பிரதமர் இந்திராவை இழிவுபடுத்தினார். சர்க்காரியா கமிஷன் வழக்குகளில் இருந்து தப்பிக்க 1980களில் ‛நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று இந்திராவின் காலில் விழுந்தார்.

அதேபோல், 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக, ‛கோ பேக் மோடி’ என்று கருப்பு பலூன் பறக்கவிட்டவர் ஸ்டாலின். திமுக.,வினர் மேடை தோறும் பிரதமர் பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் தரக்குறைவாக விமர்சித்தனர். இதையெல்லாம் மறந்துவிட்டு தன்னையும், தன் குடும்பத்தையும் பிரதமர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், ஸ்டாலின் டில்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். ஸ்டாலினின் நாடகத்தில் மயங்க, பிரதமர் மோடி, இந்திரா அல்ல. சட்ட விரோத பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டு உண்மையென்றால், உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். கருப்பு பலூன் பறக்கவிட்ட ஸ்டாலின் தனது டில்லிப் பயணத்தின் மர்மத்தை விளக்குவாரா?, என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 486

0

0