கேள்வி கேட்டால் மரணத்தை பதிலாக கொடுக்கும் கொடுங்கோல் அரசு… உண்மையை கூறினால் வழக்கு போடுவதா..? திமுக மீது இபிஎஸ் காட்டம்…!!

Author: Babu Lakshmanan
12 January 2022, 2:43 pm
Quick Share

பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருப்பதாக புகார் கூறியவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அவரது மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக அரசுதான் காரணம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தைப் பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசின் சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த பொருட்கள் தரமற்று இருப்பதாக, அதனைப் பெற்றுக் கொண்ட மக்கள் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, திருத்தணியில் ஒரு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்தது தமிழக அரசின் மீது கடும் விமர்சனத்தை உருவாக்கியது.இந்த வீடியோக்களை காண்பித்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், திமுக அரசை கடுமையாக சாடினார். இது திமுக தொண்டர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இருந்தது குறித்து வீடியோ வெளியிட்ட நந்தன் என்ற முதியவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிலர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட மன உளைச்சலால் நந்தனின் மகன் குப்புசாமி (36), தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக அரசுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், திமுக ஆட்சியில் எதிர்த்து கேள்வி கேட்டால் மரணம்தான் பதிலாக கிடைக்கிறது என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :- பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை தநந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது, அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும், தெரிவித்து கொள்கிறேன்.

வலைத்தளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையை கூறினால் ஜாமினில் வெளிவரா வழக்கு என திமுக ஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது, கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது! இது தற்கொலை அல்ல, ஜனநாயக படுகொலை, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 316

0

0