புயலை சாமர்த்தியமாக எதிர்த்து நின்ற எடப்பாடியார் அரசு..! முந்தும் தமிழகம்… விழிபிதுங்கும் ஸ்டாலின்..!!

28 November 2020, 9:01 pm
CM Stalin- Updatenews360
Quick Share

சென்னை : அனைத்து துறைகளிலும் இந்தியாவில் முதல் மாநிலமாக இருப்பதாக நாட்டின் முக்கிய பத்திரிகைகளில் ஒன்றான ‘இந்தியா டுடே’ பாராட்டும் வகையில் திறம்பட ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசு ‘நிவர்’ புயல் வீசு முன்பே புயலை மிஞ்சும் வேகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உயிரிழப்பையும் பொருள் இழப்பையும் பெருமளவு குறைத்துள்ளது.

மழை தொடர்பான விபத்துகளில் மூன்று பேர் உயிரழந்ததைத் தவிர வேறு உயிரிழப்புகள் இல்லை என்பது மட்டுமின்றி கால்நடைகளும் உயிரழப்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.
வழக்கமாக கொரோனா வந்தாலும் மழை பெய்தாலும் புயல் வீசினாலும் அதிமுக அரசைக் குறை சொல்லி அரசியல் செய்யும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்ட எதுவும் இல்லாத நிலையில் சென்னைப் புறநகரில் சில இடங்களில் நீர் தேங்கியிருப்பதை பூதாகரமானப் பிரச்சினையாக ஆக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒரு மாநிலத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஒருவர் வட்ட அளவில் ஏற்படும் சிறு பிரச்சினைகளை பெரிதுபடுத்தி அறிக்கை வெளியிடுவதால் புயலாலும் மழையாலும் வேறு பிரச்சினைகள் ஏதும் இல்லை என்பதையே காட்டுகிறது.

புயல் காற்றில் துரும்பைத் தேடுவதுபோல் ‘நிவர்’ புயலில் தமிழக அரசைக் குற்றம் சாட்ட எதுவும் காரணம் கிடைக்குமா என்று பூதக்கண்ணாடி வைத்து ஸ்டாலின் தேடிக்கொண்டிருக்கிறார் என்று பொதுமக்களும் பேசிக்கொள்கிறார்கள்.

மேலும், அவர் மழை நீர் தேங்குவதாகச் சுட்டிக்காடும் முடிச்சூர், தாம்பரம் பகுதிகளில் திமுக ஆட்சிக்காலத்தில் அடையாற்றுக்கு ஏரித்தண்ணீர் போகும் வாய்க்காலிலும் அதைச் சுற்றிய விவசாய நிலத்திலும் முறைகேடாக வீடுகட்டிக்கொள்ள அனுமதி தரப்பட்டது, இந்த முறைகேடான நடவடிக்கைதான் மழை நீர் போக வழியின்றி அந்தப் பகுதிகளில் தேங்குவதற்குக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருப்பதாக நாடு முழுவதும் ஆய்வு செய்த ‘இந்தியா டுடே’ பத்திரிகை கூறியுள்ளது. முதல் இடத்துக்கான விருதை மூன்றாவது முறையாகப் பெரும் அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியான 8.02 சதவீதம் தேசிய சராசரியான 4.2 சதவீதத்தைவிட இரண்டு மடங்காக உள்ளது.

கடந்த ஆண்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளது. மேலும், வேளாண்மை, கல்வி, பொது சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு, சுற்றுச்சூழல் பேணுதல் ஆகிய பல துறைகளிலும் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்களில் மிகவும் அக்கறை உடைய தமிழக அரசு சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் மனிதவள மேம்பாட்டிலும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

தமிழகத்தைத் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்வதால் நாள்தோறும் புகழ்மாலைகள் சூடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மணி மகுடத்தில் புயலும் தன்பங்குக்குப் புகழ்ப்பூக்களை பொழிந்துவிட்டுப் போயிருக்கிறது.

புயலில் பெருமளவு இழப்பு எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் முதல்வர் பழனிசாமி பெரும் மழையையும் காற்றையும் பொருட்படுத்தாமல் களத்தில் தானே இறங்கி ஆய்வு செய்ததும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக ஆணை வழங்கியதுதான் என்று மக்கள் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.

முதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் தங்கள் துறை அதிகாரிகளுடன் களம் இறங்கி புயலுக்கு முன்பும் பின்பும் புயல் தாக்கியபோதும் வேகமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அனைத்து துறைகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பையும் காண முடிந்தது. முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மனித உயிரிழப்பு மட்டுமில்லாது கால்நடைகளின் இறப்பும் பெரிதளவு குறைக்கப்பட்டது.

புயலுக்கு முன்பு 5,000 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 2.32 இலட்சம் மக்கள் அந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். புயல் தாக்கும் முன்னரே அரசு 4,133 பகுதிகளை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என்று கண்டறிந்தது.

அவை பாதிக்கப்படும் அளவை மதிப்பிட்டு நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டன. பேருந்து, இரயில் விமானப்போக்குவரத்து ஆகியவை சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் இருக்கும் அனைத்து நீர்நிலைகளும் ஆறுகளும் ஏரிகளும் அணைகளும் தீவிரமாகவும் முழுமையாகவும் கண்காணிக்கப்பட்டன.

2015-ஆம் ஆண்டு சென்னையில் பெரு வெள்ளம் ஏற்படக்காரணமாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வரே நேரில் சென்று ஆய்வு செய்தார். சரியான நேரத்தில் சரியான அளவு நீர் திறப்பதையும் உறுதிசெய்தார். நீர் திறப்பதற்கு முன் கரையோர மக்களுக்கு உரிய எச்சரிக்கை தரப்பட்டதால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது.

மிகச்சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் ஒருங்கிணைப்பாலும் திட்டமிடுதலாலும் இழப்புகள் மிகவும் குறைவான சூழலில் ஸ்டாலின் வழக்கம்போலக் குறைசொல்லிக்கொண்டிருப்பதை மக்கள் வேடிக்கையாகப் பார்க்கின்றனர். சிறப்பான செயல்பாடுகளுக்கு அரசைப் பாராட்டாவிட்டாலும் குறை சொல்லாமல் இருக்கலாமே என்பதை உணர்ந்த திமுகவின் கூட்டணிக்கட்சிகள் அமைதியாக இருக்கின்றன.