கல்வி டிவி சி.இ.ஓ. நியமனத்தால் சர்ச்சை : கடும் நெருக்கடியால் பின்வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2022, 2:27 pm
Anbil Mahesh - Updatenews360
Quick Share

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் எளிதாக வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கப் பள்ளிக் கல்வித் துறை சார்பில், கல்வி டிவி தொடங்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி மாணவர்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி டிவி தான் பெரியளவில் உதவியது.

இதன் காரணமாகவே திமுக ஆட்சி அமைந்த பின்னரும் கல்வி டிவி மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் கல்வி டிவியில் ஒளிபரப்பப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தச் சூழலில் கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். சில தனியார் தொலைக்காட்சிகளிலும் யூ-டியூப்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர்.

தற்காலிக அடிப்படையில் இரண்டு ஆண்டுக் காலத்திற்கு மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், செயல்பாடுகளைப் பொறுத்து அவரது பணி நீட்டிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

முதல்முறையாக பள்ளிக்கல்வித் துறையைச் சாராத ஒருவர் கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதி மாதம் ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் 2 ஆண்டிற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதி, இதற்கு முன்பாக பிரபல யூடியூப் சேனலின் இணை நிறுவனராக இருந்து உள்ளார். மேலும் செய்தி நாளிதழ் ஒன்றில் 3 ஆண்டுகள் பணியாற்றிய மணிகண்ட பூபதி, பின்னர் பிரபல செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி விட்டு யூடியூப் சேனலை உருவாக்கி இருக்கிறார்.

அந்த யூடியூப் சேனலின் இணை நிறுவனராக பணியாற்றிய மற்றும் வலதுசாரி ஆதரவாளரான மணிகண்ட பூபதியை பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ-வாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் சர்ச்சையையும், கண்டனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கள்ளக்குறிச்சி சம்பவம் முதல் தற்போதைய நியமனம் வரை பள்ளிக்கல்வித்துறை சரியாக செயல்படவில்லை என்றும், இதற்கு காரணமான அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி #Resign_AnbilMahesh என்ற ஹேஷ்டேகையும் உருவாக்கி நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வி தொலைக்காட்சி சிஇஓ வாக நியமனம் செய்யப்பட்டவர் பணியில் சேர வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர் என சர்ச்சை கிளம்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி நியமன உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் அந்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Views: - 142

0

0