நடப்பு கல்வியாண்டு ரத்தா..? அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்..!
17 September 2020, 6:44 pmடெல்லி : கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நடப்பு கல்வியாண்டு ரத்து செய்யப்படுகிறதா..? என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையிலும், தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்பட முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை எடுக்க வரும் 21ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் 12 முதல் 15 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் மூலமாக கல்வி கற்று வருவதாகவும், நடப்பு கல்வியாண்டு பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவிக்க இயலுமா..? என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்து பேசினார். அதாவது,” நடப்பு கல்வியாண்டை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. திக்ஷா, ஸ்வயம் உள்ளிட்ட பல முறைகளில் ஆன்லைன் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இணையவசதி இல்லாத மாணவர்களுக்காக தொலைக்காட்சி மூலமாகவும், சமூக வானொலி மூலமாகவும் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.