புதுப்புது கணக்குகள் : ஆ.ராசாவின் ஆசையும்..அலைபாயும் தேமுதிகவும்…!!
14 February 2021, 8:01 pmசராசரி மனிதர்களின் ஆசையைவிட அரசியல்வாதிகளின் ஆசை அளவற்றது என்பார்கள். அதுவும் தேர்தல் நேரம் என்றால் இந்த ஆசை பேராசையாகவும் மாறிவிடும். எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற துடிப்பு தானாகவே வந்துவிடும். அதற்காக பல்வேறு உத்திகளையும், வியூகங்களையும் வகுப்பார்கள்.
எதிரிக்கு எதிரியை நண்பன் ஆக்கிக் கொள்வது, எதிரியை பலவீனம் ஆக்க முயற்சிப்பது போன்றவைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும்.
இந்த மாதிரியான காட்சிகள் நடைபெற இருக்கும் தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்காக தற்போது தினம் தினம் அரங்கேறுவதை காண முடிகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தற்போதும், தான் அதிமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக கருதி வருகிறது.
அதனால் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாகவே சொல்லி வருகிறார்.
ஆனால் பாமக, பாஜகவுடன் பேச்சு நடத்துவதற்கு முன்பாக தேமுதிகவுடன் எந்த விதத்திலும் பேச்சுவார்த்தையை நடத்த தயாராக இல்லை என்பதை திட்டவட்டமாகவே அதிமுக தெரிவித்து விட்டது.
பொறுமையாக இருந்தால் இருங்கள் இல்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள் என்பதை அது பட்டவர்த்தனமாக உணர்த்துவதாகவும் இருந்தது.
அதன் பிறகும் தேமுதிக சும்மா இருக்கவில்லை. கடைசி நேரத்தில் பேச்சுக்கு அழைத்தால் குறைவான தொகுதிகளே கிடைக்கும் என்பதற்காக சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை போல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சை தொடங்க வேண்டும் என்று கூறிக் கொண்டே இருந்தது. அதை அதிமுக தலைமை கண்டுகொள்ளவே இல்லை.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு தொடங்குவது தாமதம் ஆகும் என்பதை உணர்ந்த பிரேமலதா தனது சகோதரர் எல்.கே. சுதீஷ் மூலம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் டீல் பேசினார். ஆனால் 18 தொகுதிகள் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அவர், “இங்கே காங்கிரசுக்கே இத்தனை தொகுதிகள் கிடைப்பது சந்தேகம். இதை நான் தளபதியிடம் சொன்னால் எனக்குத்தான் ஏச்சு விழும்” என்று கூறி நைசாக ஒதுங்கிக் கொண்டார்.
திமுக கதவை அடைத்ததும் மீண்டும் அதிமுக பக்கமே வந்தார். அப்போதும் தேமுதிகவிடமிருந்து அதிமுக விலகியே நின்றது.
இதனால் அதிமுக தலைமையை மிரட்டுவது போல் திரும்பவும் துரைமுருகனிடமே சென்றார். 10 தொகுதிக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்று திமுக தரப்பில் கூறப்பட்டதால் பிரேமலதா கமுக்கம் ஆகிவிட்டார்.
இப்படி அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்த தேமுதிக கடைசியில் டிடிவி தினகரன் கட்சியான அமமுகவை அணுகியது. இதற்காக பெங்களூரு சிறையில் இருந்து சென்னை திரும்பிய சசிகலாவுக்கு பாராட்டு சான்றிதழும் வாசித்தார். தனிப்பட்ட முறையில் அவரை சந்திப்பதற்கும் திரைமறைவில் தீவிர முயற்சிகளையும் மேற்கொண்டார்.
“டிடிவி தினகரன் பக்கம் போனால் தேர்தல் செலவுக்கு பிரச்சனை இல்லாமல் போகும். கேட்கும் தொகுதிகளும் தாராளமாய் கிடைக்கும். ஆனால் தேர்தலுக்குப் பின் தேமுதிக காணாமல் போய்விடும்” என்று பிரேமலதாவுக்கு நெருக்கமான அரசியல் ஆர்வலர்கள் ஆலோசனை கூற உடனேயே ‘யூ டேர்ன்’ போட்டார், பிரேமலதா. சசிகலாவை சந்திக்கும் திட்டமே என்னிடம் இல்லை என்றும் மறுத்தார்.
பிறகு தமிழக அரசியலில் மிகுந்த அக்கறை கொண்டவராக ‘தேர்தல் கூட்டணியை உறுதி செய்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக, அதிமுக இரண்டுமே உடனடியாக தொடங்க வேண்டும்’ என்று பொத்தாம் பொதுவாக ஒரு கோரிக்கையை வைத்தார். அவருடைய இந்த பேச்சிலிருந்து ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அதிமுக, திமுக கூட்டணியை தவிர வேறு எந்த அணியும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை இதற்கு அர்த்தம் கொள்ளலாம்.
பிரேமலதாவின் மறு கோரிக்கைக்கு இதுவரை அதிமுக தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. ஆனால், இதில் ஆச்சரியப்படும் விதமாக பிரேமலதா தெரிவித்த கருத்துக்கு உடனடியாக திமுக தனது பதிலை கூறி விட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் திமுக எந்தக் காலத்திலும் கூட்டணி குறித்து பிற அணியில் உள்ள கட்சிகள் சொல்லும் யோசனையை காதில் போட்டுக் கொள்ளவே செய்யாது. அதை ஒரு தகவலாகவே மட்டும் பார்க்கும். ஆனால் பிரேமலதா இப்படி சொன்னதுமே திமுக துணைப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் எம்பியுமான ஆ.ராசா உடனடியாக செய்தியாளர்களிடம் பேசும்போது ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அதாவது தேமுதிகவின் கோரிக்கை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைப்பது பற்றியும் அவர்தான் முடிவெடுப்பார் என்று சொல்லியிருக்கிறார்.
ஆ ராசாவின் இந்த பதிலில் ஒரு சூட்சமம் இருப்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
“பிரேமலதா கோரிக்கை வைத்தது, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக-திமுக இரண்டும் தங்களது கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச வேண்டும் என்பதை மட்டும்தான். அவர் ஒருபோதும் திமுக கூட்டணியில் இணைவது பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ எங்கும் குறிப்பிடவில்லை.
அப்படியிருக்கும்போது தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைப்பது பற்றி திமுக தலைவர் முடிவு செய்வார் என்று ஆ.ராசா ஏன் கூறினார்?… கேள்வியை எழுப்பியது செய்தியாளர்கள் என்றாலும் கூட அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் திமுகவிடம் இதுவரை இல்லை என்றுதான் அவர் கூறி இருக்க வேண்டும்.
ஆனால் இவராகவே தனது விருப்பத்தை சொல்லி இருக்கிறார். இதுதான் ஏன் என்பது புரியவில்லை” என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதன் உள்ளர்த்தத்தை அதிமுக தலைமையும் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறது.
இதுபற்றி அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் “ராசாவின் பேச்சு வேடிக்கையாக இருக்கிறது. திமுக கூட்டணியில் சேர்வதற்கு தேமுதிக எந்த கோரிக்கையையும் வைக்காத நிலையில் அக்கட்சியை சேர்த்துக் கொள்வது பற்றி ஸ்டாலின் முடிவு செய்வார் என்று அவர் எப்படிக் கூறுகிறார்?
ஒருவேளை, திமுக மறைமுக பேச்சு வார்த்தை நடத்தியிருந்து தேமுதிகவை, தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்து இருந்தால் கூட அதை இப்படி வெளிப்படையாக யாரும் சொல்ல மாட்டார்கள். தேமுதிக தங்கள் அணிக்கு வரவேண்டும் என்பதில் அவர்களுக்கு துளியும் விருப்பமில்லை என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஒருவேளை அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்தால் அக்கட்சிக்கு அதிக தொகுதிகளை அதிமுக ஒதுக்கவேண்டும் என்கிற நப்பாசையைத்தான் தனது பதிலில் ராசா வெளிப்படுத்தி இருக்கிறார்.
பல நேரங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து இதுபோன்று பதில்களை சொல்ல வைப்பார். அதனால் ஸ்டாலினின் குரலாகவே இதை பார்க்கிறோம். திமுகவின் பசப்பு வார்த்தைகளை கேட்டு அதிமுக ஏமாந்து விடாது.
தேமுதிக கேட்கும் 41 தொகுதிகளை திமுக ஒதுக்க முன்வந்தால் அவர்களே தாராளமாக கூட்டணியில் சேர்த்துக் கொள்ளட்டும். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று ஆ.ராசாவின் பதில் குறித்த சூட்சமத்தை அந்த தலைவர் புட்டு வைத்தார்.
அட! அரசியலில் இப்படி எல்லாம் கூட காய்களை நகர்த்துவார்களா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!
0
0