முடிந்தவரை மே 2 நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிட நடவடிக்கை : தேர்தல் அதிகாரி சாகு தகவல்..!!

21 April 2021, 2:03 pm
Sathya Pratha Sahoo -Updatenews360
Quick Share

சென்னை : மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். பின்னர், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- வாக்கு எண்ணிக்கை தேதியை தள்ளிவைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. திட்டமிட்டபடி மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து தொகுதிகளுக்கான முடிவை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளினால் முன்பை விட இந்த முறை வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும்.

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஏஜெண்டுகளுக்கு கொரானா தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசி வருகிறோம்.

கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடர்ந்து நடத்தி வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக14 மேஜைகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள நிலையில், கூடுதல் மேஜைகளை அமைப்பது கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப மாற வாய்ப்புள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் இடவசதி இருந்தால் அது பயன்படுத்திக் கொள்ளப்படும்

அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொரோனா பரவல், மற்றும் சூழல் மாறுபடுகிறது. அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டபின் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி குறிப்பிட்ட அளவு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மர்ம வாகனங்கள் வந்ததாக எழுந்த புகார் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இன்று மாலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், மற்றும் கொரனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை உள்ளது, எனக் கூறினார்.

Views: - 100

0

0