ஆக.,31 வரை கடன் தொகையை செலுத்தாதவர்களை வாராக்கடன் பட்டியலில் சேர்ப்பதற்கான தடை நீட்டிப்பு

10 September 2020, 1:09 pm
supreme_court_updatenews360 (2)
Quick Share

டெல்லி : ஆக.,31ம் தேதி வரையில் கடன் தொகையை செலுத்தாதவர்களை வாராக்கடன் பட்டியலில் சேர்ப்பதற்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால், வங்கிக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் மற்றும் கிரெடிட் கார்டுக்கான தவணைத் தொகைகளை செலுத்துவதில் வாடிக்கையாளர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவின் பேரில், கடன் தவணைகளை செலுத்துவதில் அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால், கடன் தவணை தொகையை செலுத்தும் காலத்தை அதிகரித்ததோடு, கடன் மற்றும் வட்டி சுமை அதிகரிப்பதை சுட்டிக் காட்டிய பல்வேறு தரப்பினர், இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்றும், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை தவணைத் தொகை கட்டாதவர்களின் கணக்குகள், கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் முடிவெடுக்க அவகாசம் கோரியதை தொடர்ந்து, 2 வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேலும், அவகாசம் கோரக் கூடாது என மத்திய அரசுக்கு கண்டிப்பு தெரிவித்த நீதிபதிகள், ஆக., 31ஆம் தேதி வரை ஆறு மாத காலத்திற்கு இஎம்ஐ கடன் தொகையை செலுத்தாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என உத்தரவிட்டனர்.

Views: - 0

0

0