பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம் : சிறப்புப்பிரிவில் 2,410 பேர் பங்கேற்பு..!

1 October 2020, 10:56 am
counciling- updatenews360
Quick Share

சென்னை : தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு கல்வி நிறுவனங்களை திறக்கும் முனைப்பில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் நவ.,1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, அக்.,31ம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து வகுப்புகள் தொடங்கலாம் என்றும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச்சில் முதல் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் ஏற்கனவே பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. இதுவரையில், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனடிப்படையில் ரேண்டம் எண்ணும் வெளியிடப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877- இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். அப்போது, அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும்,
அக்., 8ம் தேதி முதல் 27ம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொதுக்கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் மொத்தம் 2,410 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு வரும் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Views: - 7

0

0