தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அல்வா?…இபிஎஸ் கொளுத்தி போட்ட சரவெடி!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2023, 5:42 pm
EPS - Updatenews360
Quick Share

அதிமுகவில் ஒற்றை தலைமை இருந்தால்தான் திமுகவுக்கு எப்போதுமே சவாலாக திகழ முடியும் என்பது ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

வீறுநடை போட்ட அதிமுக

அதிமுகவை நிறுவி கட்சியை வெற்றிகரமாக ஆட்சி கட்டிலில் அமர்த்திய எம்.ஜி.ஆரும், அவருடைய மறைவுக்கு பின்பு அதிமுகவை வலிமையுடன் வழி நடத்திய ஜெயலலிதாவும் இதை நன்றாகவே உணர்ந்திருந்தனர். இதில் எந்த சமரசத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால்தான் தங்களின் வாழ்நாள் இறுதிவரை, அவர்கள் இருவரும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர் என்பதும் உண்மை.

இரட்டை தலைமை

ஆனால் 2017ம் ஆண்டின் இறுதியில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்ட பின்பு கட்சிக்குள் அவ்வப்போது சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டன.

இருந்தபோதிலும் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்து இந்த சிக்கல் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டார்.

இந்த நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 3 சதவீத ஓட்டுகளில்தான் திமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. எனினும் இக்கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது. இதில் அதிமுக வென்றது, மட்டும் 66.

ஒற்றைத் தலைமை பிரச்சனை

அப்போதுதான் இரட்டை தலைமை தொடர்ந்து நீடித்தால் எந்த காலத்திலும் திமுகவை வீழ்த்துவது கடினம் என்பதை புரிந்துகொண்ட அதிமுகவின் தொண்டர்கள், நிர்வாகிகள், ஒன்றிய, மாவட்ட செயலாளர்கள், மூத்த தலைவர்கள் ஒற்றைத் தலைமையே கட்சிக்கு சிறந்தது என்ற கோஷத்தை மெல்ல மெல்ல மீண்டும் எழுப்பத் தொடங்கினர். விரைவிலேயே அது உச்சத்தையும் எட்டியது

அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில், 2100-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதுவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ பன்னீர்செல்வத்தை பொதுக்குழு அதிரடியாக நீக்கியது.

இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. பலமுறை தள்ளி வைக்கப்பட்ட இந்த வழக்கு, வருகிற 4ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள், இடைக்காலப் பொதுச்செயலாளர் தேர்வு உள்ளிட்ட விவரங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் ஆதரவாளர்கள் உடனடியாக பிரமாண பத்திரங்களாக தாக்கல் செய்தும் விட்டனர். இதை எதிர்த்தும், ஓபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவையும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

இந்நிலையில், ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி ஏற்றதைத் தொடர்ந்து, அடுத்த ஜி-20 மாநாட்டை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கடந்த மாதம் 5-ம் தேதி டெல்லியில் அவர்
ஆலோசனை நடத்தினார்.

இதில் பங்கேற்க அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அழைப்பு விடுத்திருந்தது. இதில், அவரது பெயருக்கு கீழ் இடைக்கால பொதுச் செயலாளர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், மத்திய அரசே இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டதாக இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் கொதித்து எழுந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசமாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினர். ஆனால் இதற்கு மத்திய அரசு எந்த பதிலையும் அளிக்கவில்லை.

இபிஎஸ்க்கு அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசு

இந்த சர்ச்சை அடங்கிய நிலையில், இரு நாட்களுக்கு முன்பு, மத்திய சட்ட ஆணையம் `ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியது. இதிலும், ஓபிஎஸ் தரப்புக்கு கடிதம் வரவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் வந்தது.

அதன் அடிப்படையில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இபிஎஸ்சை மத்திய சட்ட ஆணையம் அங்கீகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் இதை எதிர்த்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார்.

அதிமுகவுக்கு தமிழக தேர்தல் ஆணையம் கடிதம்

இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அதிமுகவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், கட்சிகளின் பிரதிநிதிகள் வருகிற 16ம் தேதி தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அழைப்பு விடுத்ததுடன் அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அவர் அழைப்பு விடுத்து எழுதிய கடிதம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்ததால் அதை இபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என்று பதில் அளித்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அந்தக் கடிதத்தை சத்யபிரத சாஹுவிற்கே திருப்பி அனுப்பி விட்டனர்.

இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக தேர்தல் ஆணையத்தை பரிதவிப்புக்கும் உள்ளாக்கிவிட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,‘‘பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படும். கட்சிக் கொடி மற்றும் அதிமுக சார்ந்த அனைத்தும் இடைக்கால பொதுச் செயலாளரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது’’ என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரங்கள் குறித்து டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறும் தகவல்கள் முற்றிலும் புதிதாக உள்ளது.

ஓபிஎஸ்க்கு எதிராகவே தீர்ப்பு அமையும்

“அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ்இன் வழக்கை முதன்முதலில் சுப்ரீம் கோர்ட் விசாரித்தபோது, ஒரு கட்சியின் பொதுக்குழு விவகாரங்களில் கோர்ட் தலையிடுவது உகந்ததாக இருக்காது. இது போன்ற விவகாரங்களை நீங்கள் சென்னை ஹைகோர்ட்டிலேயே தீர்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியது. அதன் பிறகுதான் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்தார். அதில் தனி நீதிபதியின் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமைந்தாலும், இபிஎஸ்இன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஜூலை 11-ந்தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் கூட்டம் என்ற தீர்ப்பை வழங்கியது. இந்த வாதங்களை அடிப்படையாக வைத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டால் ஓபிஎஸ்க்கு எதிராக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

தவிர 2021-22ம் ஆண்டுக்கான அதிமுகவின் வரவு செலவு, கணக்குகளை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் தாக்கல் செய்ததை தலைமை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது.

அதிமுக தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் நாடாளுமன்ற விவகாரத் துறை, தலைமை தேர்தல் ஆணையம், மத்திய அரசின் சட்ட ஆணையம் இபிஎஸ்க்கு அனுப்பிய கடிதங்கள், வழக்கு விசாரணையில் முக்கிய ஆவணங்களாகவும் ஆதாரங்களாகவும் தாக்கல் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

திறம்பட செயல்பட்ட இபிஎஸ்

இவை இபிஎஸ்க்கு ஆதரவாக அமைந்திருக்கின்றன என்பது நிதர்சனம். இதன் அடிப்படையில் 4-தேதி வழக்கு விசாரணையின்போது இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படலாம்.

இன்னொன்று. எம்ஜிஆர்-ஜெயலலிதா அளவிற்கு எடப்பாடி பழனிசாமி புகழ் பெற்றவரோ, வசீகரமானவரோ அல்ல என்று கூறப்பட்டாலும் கூட திமுகவை தீவிரமாக எதிர்ப்பதிலும், எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டங்களை சமாளித்து தமிழகத்தில் நான்கரை ஆண்டுகள் ஆட்சியை திறம்பட நடத்தியதிலும் அவர்கள் இருவருக்கும் இணையாக அதிமுகவினரால் அவர் பார்க்கப்படுகிறார்.

மேலும் ஜூலை 11-ம் தேதி காலை 9 மணிக்கு, அதிமுக தலைமை கழக அலுவலகத்தின் கதவுகளை தனது முரட்டு ஆதரவாளர்கள் கால்களால் எட்டி உதைத்து, கட்டைகளால் அடித்து நொறுக்கி உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது அவர்கள் பின்னால் ரசித்து, சிரித்துக் கொண்டே ஓபிஎஸ் சென்ற காட்சியையும் அலுவலகத்தை சூறையாடியதையும் டிவி செய்தி சேனல்களின் நேரடி ஒளிபரப்பில் பார்த்த எம்ஜிஆர், ஜெயலலிதா மீது உண்மையான பற்று கொண்ட எந்தவொரு அதிமுக தொண்டனும் அந்த வன் செயலை ஒரு போதும் மன்னிக்க மாட்டான் என்பதும் நிஜம்.

அதிமுகவுக்கு இபிஎஸ்தான் எதிர்காலம்

அன்று முதல் கடந்த 6 மாதங்களாக ஓபிஎஸ் தனது சுயநலத்துக்காக கோர்ட் படிகளைத்தான் ஏறிக் கொண்டிருக்கிறாரே தவிர தமிழக மக்களின் பிரச்சினைக்காகவோ, நலனுக்காகவோ போராடவில்லை. ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. காகித புலி போல அறிக்கை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கிறார்.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமியோ திமுகவின் ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்களில் அதிமுக தொண்டர்களை திரட்டி திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் விட்டார். இந்த ஒப்பீட்டில் 100க்கு 100 சதவீத வெற்றி இபிஎஸ்சுக்கே கிடைத்திருக்கிறது.

இதை மத்திய பாஜக அரசும் மாநில பாஜக நிர்வாகிகளின் கள ஆய்வு மூலம் உறுதி செய்து கொண்டுள்ளது.

எனவே இபிஎஸ் தலைமையில் அதிமுக இயங்குவதே அக்கட்சியின் எதிர்கால அரசியலுக்கு சிறந்தது என்று” அந்த அரசியல் நோக்கர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Views: - 287

0

0