தனித்து களமிறங்கும் தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக… அக்னி பரீட்சையில் சிக்கிய கட்சிகள்… எதிர்பார்க்கும் ஓட்டு கிடைக்குமா?…

Author: Babu Lakshmanan
24 January 2023, 5:56 pm
Quick Share

இடைத்தேர்தல்

திருமகன் ஈவெரா எம்எல்ஏ மரணம் அடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கு வருகிற 31ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் இப்போதே சூடு பிடித்து விட்டது.

திமுக கூட்டணி சார்பில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்
ஈவிகே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எப்படியும் வெற்றி பெற வைத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் ஆளுங்கட்சியான திமுக தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஒருவருக்காக, அதுவும் ஒரெயொரு தொகுதியின் இடைத் தேர்தலுக்காக பெரும் படையையே தேர்தல் பணிக் குழுவாக இறக்கியுள்ளது.

இந்தக் குழுவில் கே.என்.நேரு, முத்துசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி, நாசர், அர.சக்கரபாணி உள்ளிட்ட 11 அமைச்சர்கள், 2 எம்பிக்கள்,
7 எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளடக்கிய 31 பேர் இடம் பிடித்து இருக்கின்றனர்.

இதிலிருந்தே திமுக இந்த இடைத்தேர்தலை மிகப்பெரியதொரு சவாலாக எடுத்துக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்தக் குழு அமைக்கப்படுவதற்கு முன்பாகவே கடந்த 21ம் தேதி அமாவாசை நாளில் அமைச்சர்கள் கே என் நேரு, முத்துசாமி இருவரும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பிலும் இறங்கி விட்டனர், என்பதுதான்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியின் சார்பாக வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்து இருக்கிறார். இதற்காக போட்டியிட விரும்புவர்களிடம் வருகிற 26-ம் தேதி வரை விருப்ப மனுவும் பெறப் படுகிறது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த பின்பு வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

அதேநேரம் தமிழக பாஜக தனது வேட்பாளரை நிறுத்தினால், எங்கள் தரப்பில் வேட்பாளர் யாரையும் நிறுத்த மாட்டோம். இல்லையென்றால் எங்கள் அணி நிச்சயம் தேர்தலில் போட்டியிடும் என்று ஓ. பன்னீர் செல்வம் அதிர்ச்சி கலந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டு, பாஜகவை பெரும் தர்ம சங்கடத்திலும் ஆழ்த்தி இருக்கிறார்.

யார் போட்டியிட்டாலும் நாங்களும் போட்டியிடுவோம் என்று தைரியமாக அவரால் அடித்துக் கூற முடியவில்லை. இதனால் ஓபிஎஸ் பாஜகவின் B டீம் ஆக செயல்படுகிறார் என்றும், இல்லை இல்லை அவர் திமுகவின் B டீம்தான் என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படும் சூழலும் உருவாகி விட்டது.

இந்த நிலையில்தான், விஜயகாந்தின் தேமுதிக, சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக ஆகியவை இந்த இடைத்தேர்தலில், தனித்து களமிறங்குகின்றன.

நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெண் வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். வேட்பாளர் வருகிற 29-ந் தேதி அறிவிக்கப்படுவார் என்று சீமான் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களுடன் அவர் கலந்துரையாடியும் இருக்கிறார்.

இதேபோல சென்னையில் நடந்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது. எங்கள் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

தேமுதிக தொடங்கியது முதல் தற்போது வரை அனைத்து இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டு இருக்கிறது. சில நேரங்களில் கூட்டணிக்கு விட்டுக் கொடுத்துள்ளோம். தற்போது தேமுதிக எந்தக் கூட்டணியிலும் இல்லை. 2011-ம் ஆண்டு தேமுதிக வென்ற தொகுதிதான் ஈரோடு கிழக்குத் தொகுதி. எனவே தேமுதிக தனித்து களம் காண்கிறது” என்றார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறும்போது, “ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கும் ஆசைதான். அதேபோல் கட்சி நிர்வாகிகளும் நிற்க விரும்புகின்றனர். நிச்சயம் இந்த தேர்தலில் அமமுக சார்பாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுவார். இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளோடு ஆலோசித்து வரும் 27ம் தேதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் இப்படி நாள் குறித்ததாலும் கூட ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக போட்டியிடுவது உறுதி என்பதை வெளிப்படுத்தும் விதமாக அக் கட்சியின் நிர்வாகிகள் கடந்த இரண்டு நாட்களாக வாக்கு சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

2021 சட்டப்பேரவை தேர்தலில், இந்தத் தொகுதியில் சீமானின் நாம் தமிழர் கட்சி சுமார் 11ஆயிரம் ஓட்டுகளும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் ஓட்டுகளும்
அமுமக- தேமுதிக கூட்டணி 1200 ஓட்டுகளும் பெற்றுள்ளன.

அதேநேரம், இடைத்தேர்தல் என்பதால், நாம் தமிழர் கட்சிக்கும், அமமுக, தேமுதிக கட்சிகளுக்கும் 2021 தேர்தலை போல ஓட்டுகள் கிடைக்குமா? அல்லது அதைவிட குறைவாக கிடைக்குமா? அதிகமாகப் பெறுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
தவிர கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 67 ஆயிரம் ஓட்டுகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றுள்ளார். தவிர 58 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பக்கம் உள்ளது.

அப்படி இருக்கும்போது, இந்த மூன்று கட்சிகளும் தனித்து போட்டியிடுவதன் மூலம் எதை சாதிக்க போகின்றன என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது.

எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை மனதில் கொண்டுதான் தனித்து களம் காண்கின்றன என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“2011 தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக வேட்பாளர், வெற்றி பெற்றதன் அடிப்படையில் பிரேமலதா ஒரு கணக்கு போடுகிறார். இந்த இடைத்தேர்தலில் 7 சதவீத வாக்குகளை பெற்று விட்டால் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் குறைந்தபட்சம் இரண்டு எம்பி தொகுதிகளை பேரம் பேசி வாங்கி விட முடியும். அதேபோல் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 18 தொகுதிகளை போராடிப் பெற்று விட முடியும் என்பதுதான் அந்தக் கணக்கு.

ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவாக உள்ள நிலையில் பிரேமலதாவின் பிரச்சாரம் மூலம் அது சாத்தியமாகுமா? என்று தெரியவில்லை. அதுவும் ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிக்காக தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதனால் தேமுதிக டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர் கே நகர் இடைத்தேர்தல் போல என்னதான் இருபது ரூபாய் டோக்கன் ஆசை காட்டினாலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அந்த கதை வேகுமா? என்பது சந்தேகம்தான். அதுவும் கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்த போதே 1200 ஓட்டுகள்தான் அமமுக வாங்கி இருந்தது. 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவின் கடைக்கண் பார்வை இருந்ததால்தான் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்று கூறப்படுவதும் உண்டு. அதனால்தான் அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் இழந்தும் போனார் என்பார்கள்.

அன்று திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது. ஆளும் அதிமுகவுக்கு குடைச்சல் கொடுக்கவே டிடிவி தினகரனை திமுக திட்டமிட்டு ஜெயிக்க வைத்தது என்று கூறப்படுவதை உண்மை என நம்பவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதோ திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் அதுபோன்ற தில்லாலங்கடி வேலையை டிடிவி தினகரனால் செய்ய முடியாது என்று அடித்துச் சொல்லலாம்.

ஏனென்றால் 2021 சட்டப்பேரவை தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் அவர் போட்டியிட்டபோது அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜுவிடம் இந்த ஜம்பம் பலிக்கவில்லை.

அதனால் இந்த இடைத்தேர்தலில் அவருடைய கட்சிக்கு ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தாலே ஆச்சர்யமான விஷயமாக இருக்கும். இப்போதும் கூட அவர் பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை. அவருடைய எதிர்கால அரசியலுக்கும் இந்த தேர்தல் எந்த வகையிலும் உதவப் போவதும் கிடையாது. ஆனால் பாஜகவிடம் அமமுகவுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க டிடிவி தினகரன் தனது வேட்பாளரை நிறுத்துகிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

நாம் தமிழர் கட்சியின் நிலைமையும் இதேபோல்தான் உள்ளது.

2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீமானால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் மாயமானார்கள். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இது சாத்தியமில்லை என்றாலும் கூட, அவருடைய பெண் வேட்பாளருக்கு மறைமுகமாக பல்வேறு சோதனைகள், நெருக்கடிகள் வரலாம். அதனால் அந்த வேட்பாளர் மனு தாக்கல் செய்துவிட்டு பின்னர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. இது போன்ற நிலையில் அவருடைய கட்சிக்கு 2021 தேர்தலில் கிடைத்த ஓட்டுகளில் பாதி கிடைத்தாலே மிகப்பெரிய சாதனையாக இருக்கும். எந்தத் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்ற முடிவில் உறுதியாக இருக்கும் சீமானின் எதிர்கால அரசியலுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் உதவுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

ஆனால் இந்த மூன்று கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதால் வாக்காளர்களுக்கு சிறப்பு கவனிப்பு நடக்கும் வாய்ப்புகள் அதிகம்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் எதார்த்த நிலையை போட்டு உடைக்கின்றனர்.

Views: - 90

0

0

Leave a Reply