பதவி கிடைக்காத வேதனையில் திமுக முக்கிய தலைவர் : அதிமுகவுக்குத் திரும்பும் யோசனையில் எ.வ. வேலு!

17 September 2020, 7:35 pm
EV Velu - updatenews360
Quick Share

சென்னை : திமுக தலைவருக்கு நெருக்கமாக இருந்தும் கட்சிக்காக அமைப்பு ரீதியிலும் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதிலும் கடுமையாக உழைத்தாலும் அதிமுகவில் இருந்துவந்தவர் என்ற காரணம் காட்டி கட்சியில் முக்கிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதால் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு கடும் மனக்கசப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 2016 தேர்தலில் வெற்றி பெற எ.வ. வேலு முக்கிய பங்காற்றினார். ஆனால், தற்போது அவரது செயல்பாடுகள் முடங்கிப்போயுள்ளதாகவும் அவர் வெளியிடும் அறிக்கைகள் கூட வேண்டுமென்றே தவறாக இருப்பதாகவும் கட்சியினர் பேசிக்கொள்கின்றனர். செப்டம்பர் 9-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலைக்கு வருகை தந்தது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை கூட தவறுகள் மலிந்து காணப்பட்டது.

10 ஆண்டுகளாக வளர்ச்சியே இல்லை -முதல்வர் வருகை குறித்து எ.வ.வேலு  குற்றச்சாட்டு! | DMK EV VELU | nakkheeran

வழக்கமாக அவர் வெளியிடும் அறிக்கைகள் மிகவும் கவனத்துடன் எழுதப்படும். ஆனால், முதல்வர் வருகை பற்றிய அவரது அறிக்கை வேண்டுமென்றே அதிமுகவுக்கு சாதகமாகவும் எளிதில் மறுக்கக்கூடியதாகவும் இருக்கிறது. “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார் என காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டு, பொதுமக்களை நடமாடவிடாமல் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதுதான் மிச்சம்”, என்று வேலு கூறியிருப்பது தவறானது என்பது மாவட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

முதல்வர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்ட அதேநேரத்தில், முதல்வர் அந்தச் சாலையைக் கடந்ததும் சாதாரணமாகவே விடப்பட்டது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து நெரிசல் என்பது இல்லாத ஒன்றாகவே இருந்தது என்பது அனைவரும் அறிந்தது.

எனவே, மாவட்ட மக்கள் வேலுவின் அறிக்கையை வேடிக்கையாகவே பார்க்கின்றனர். திமுகவுக்கும் இதனால் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அறிக்கையில் கலைஞர் பற்றி, தலைவர் ஸ்டாலின் பற்றி, தி.மு.க என்கிற வார்த்தைகள் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. ஒரு இடத்திலும் ஸ்டாலின் பெயர் கூட இல்லை.

மாவட்டத்தின் மூத்த திமுக நிர்வாகிகள், அவர் அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று முடிவு செய்துவிட்டதாக கூறுகிறார்கள். அவர் நடத்திவரும் அருணை மருத்துவக் கல்லூரியின் அனுமதிக்காக முதல்வரை சந்தித்தார். அவருடன் நெருக்கமாக உள்ளார் என்றும் பேசிக்கொள்கின்றனர்.

A mix of old and new faces in DMK list - The Hindu

செப்டம்பர் 3ஆம் தேதி எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் சேலம் குள்ளம்பட்டியில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்துக்கு எட்டுவழிச்சாலையால் பாதிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த 7 எம்.பிக்களை அழைத்துள்ளனர். இதில் சேலம் பார்த்திபன், தருமபுரி டாக்டர் செந்தில்குமார் உட்பட 6 பேரும் கலந்துகொண்ட நிலையில் திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை வருகிறேன் எனச்சொன்னவர் கடைசியில் கலந்துகொள்ளவில்லையாம். முதல்வர் எடப்பாடியுடன் நல்ல நெருக்கத்தில் வேலு இருப்பதால் தான் அண்ணாதுரையை அனுப்பவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பக்கத்து மாவட்டத்தில் உள்ள க. பொன்முடிக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது, ஆனால், அதிமுகவில் இருந்து வந்தவர் என்ற காரணத்தைக்கூறி வேலுவுக்குப் பதவி மறுக்கப்பட்டுள்ளது என்பதால் அவர் வேதனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எவ்வளவுதான் திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் விசுவாசமாக உழைத்தாலும் கட்சியில் தன் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் திமுகவில் இனிமேல் எவ்வளவு கடுமையாகப் பாடுபட்டாலும் முன்னேற முடியாது என்று அவர் எண்ணத் தொடங்கிவிட்டார். இனிவரும் தேர்தலில் முன்போல் செயல்படமாட்டார் என்றும் உரிய நேரம் வரும்போது அதிமுகவில் மீண்டும் இணைவது குறித்து அவர் யோசிக்கத் தொடங்கிவிட்டார் என்று பரவலாகப் பேசப்படுகிறது