பா.ஜ.க.வின் முகம் ஆகிறாரா அண்ணாமலை..? நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொண்டர்களின் ஆதரவு..!!

2 September 2020, 12:34 pm
annamalai bjp - updatenews360
Quick Share

கோவை: பா.ஜ.க தொண்டர்களின் பேராதரவால் அக்கட்சியின் முகம் ஆகிறாரா அண்ணாமலை என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி டெல்லியில் வைத்து பா.ஜ.க.,வின் இணைந்தார். ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தவுடன் பா.ஜ.க.,வில் இணைந்தது நாடு முழுவதும் பேசுபொருளானது. அவர் கட்சியில் இணைந்தவுடன் முதன் முறையாக தமிழகத்தில் கோவை மாவட்டத்திற்கு வந்தார். கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்திற்கு வந்த அவருக்கு கட்சி தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

annamalai- Updatenews360

மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து, அண்ணாமலைக்கு மலர் மகுடம் சூட்டி மற்றும் வேல் ஒன்றை பரிசளித்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

”நான் இந்த வரவேற்புகளுக்கு தகுதியானவனா?” என்று அண்ணாமலை அன்றைய தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே தெரிவித்தார்.

முன்னாள் ஐ.பி.எஸ்., நேர்மையானவர், கர்நாடகத்தில் பல விருதுகளை வாங்கியவர் உள்ளிட்ட காரணங்களால் அவர் மீது மக்களுக்கு பிரியம் இருப்பதாகவும், அவர் பா.ஜ.க.வின் முகம் ஆகிவிடமாட்டார் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் கூறினாலும், தொடர்ந்து தொண்டர்கள் அளிக்கும் வரவேற்பு இதனை உறுதி செய்கிறது.

நேற்று கோவை பா.ஜ.க அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் முருகன், துணைத் தலைவர்கள் வானதி சீனிவாசன், கனகசபாபதி மற்றும் புதிய துணைத் தலைவராக பதவியேற்ற அண்ணாமலை மற்றும் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, கட்சி தொண்டர்களும் அதிக அளவில் கூடினர். ஆரம்பம் முதலே தொண்டர்களின் பார்வை அண்ணாமலையை நோக்கியே இருந்தது. இந்த சூழலில் நிகழ்ச்சி முடித்து ஒவ்வொரு தலைவராக வெளியேறினர். அண்ணாமலை வெளியே வரும் போது அவரை சூழ்ந்து கொண்ட தொண்டர்கள், அவருடன் செல்பி எடுத்து தங்களது ஆதரவுகளை அண்ணாமலைக்கு தெரிவித்தனர்.

அதே நேரத்தில், மற்றொரு துணைத் தலைவர் கனகசபாபதி, அண்ணாமலையை சூழ்ந்திருந்த ரசிகர்களின் கூட்ட நெரிசலில் வெளியேறினார். ஆனால், அவரை ஒருவரும் சீண்டவில்லை என்பது வேடிக்கை.

Cbe bjp 3- updatenews360

அண்ணாமலை பா.ஜ.க.,வின் முகம் என்பதற்கு இது போதாதா என்று அவரின் ஆதரவாளர் ஒருபுறம் கூற, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் பா.ஜ.க.,வின் முகம் யார்?” என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு, ”பிரதமர் நரேந்திர மோடியே பா.ஜ.க.,வின் முகம்” என்ற பதிலைக் கொடுத்து நழுவிச்சென்றார் அக்கட்சியின் மாநில தலைவர் முருகன்.

Views: - 6

0

0