மீசை வைத்தவர் எல்லாம் கட்ட பொம்மன் கிடையாது… கொஞ்சம் பார்த்து பேசுங்க ; அண்ணாமலைக்கு ஜெயக்குமார் அட்வைஸ்..!

Author: Babu Lakshmanan
8 March 2023, 1:04 pm
Quick Share

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அண்ணாமலை ஒப்பிட்டு பேசக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி, கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சற்று அதிருப்தியடையச் செய்திருப்பது போல் தெரிகிறது.

இந்த அதிருப்தியை நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது அப்பட்டமாக வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது :- தமிழகத்தில் ஒரு காலத்தில் அரசியல் களம் திராவிட கட்சிகளில் இருந்து யாராவது வந்து பாஜகவை காப்பாற்ற மாட்டார்களா என இருந்தது. ஆனால் தற்போது சில திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு பாஜக தான் கண் முன் தெரிகிறது. பாஜக வளர்ந்து வருகிறது. தலைவர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றோம்.

நான் தலைவன், எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பேன். நான் எதற்கும் கவலைப்பட போவதில்லை, கட்சி அதிர்வுகளை சந்திக்கும் என்றார். தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை;ஜெயலலிதா, கருணாநிதி எப்படி முடிவு எடுப்பார்களோ அதுபோல் தான் என் முடிவும் இருக்கும். தமிழகத்தில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் இல்லை.பாஜ.க.வை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்த்துவதே என் நோக்கம், எனக் கூறினார்.

அவரது இந்தப் பேச்சுக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பக்குவத்துடன் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், அவர் பேசியதாவது :- மீசை வைத்தவர் எல்லாம் கட்ட பொம்மன் கிடையாது. செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாவாக முடியாது. ஜெயலலிதாவோடு தன்னை ஒப்பிட்டு அண்ணாமலை பேசக்கூடாது. ஜெயலலிதாவிற்கு நிகரான தலைவர் யாரும் இனி வர முடியாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பக்குவத்துடன் பேச வேண்டும்.

அதிமுகவில் பாஜகவினர் சேருவதை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு காணக் கூடாது. கூட்டணி தொடர்பான அதிமுக நிலைப்பாட்டை இபிஎஸ் ஏற்கனவே தெரிவித்து விட்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலிவ் பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடரும், என தெரிவித்துள்ளார்.

Views: - 362

0

0