இரண்டு அமாவாசைகள் சேர்ந்தால் மொத்த தமிழ்நாடு இருட்டாகிவிடும்… அரசியலில் நிறம் மாறுவது ஓ.பி.எஸ் தான் : ஜெயக்குமார் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
9 May 2023, 2:31 pm
Quick Share

வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் எங்களுக்கு எதிரி இல்லை என்றும், அவர்களும் தற்பொழுது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னை ராயபுரம் பகுதியில் நடைபெற்ற அதிமுகவின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் முகாமில் கலந்து கொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது :- ஒவ்வொரு கிராமத்திலும் , ஒவ்வொரு வட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. ஒரு பழமொழி சொல்வார்கள், காய்ந்த கொல்லையில் குதிரை மேய்ந்தால் என்ன கழுதை மேய்ந்தால் என்ன?

ஓபிஎஸ் , டிடிவி சந்திப்பு கவுண்டமணி, செந்தில் நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்தது போன்று நகைச்சுவையானது தான். பல்வேறு வகையில் டிடிவி யை அரசியல் துரோகி என்றார் ஓபிஎஸ். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் இந்த குடும்பத்தின் மீது சந்தேகம் என்றும், ஊர் ஊராக சென்று சசிகலா தான் காரணம் என்று சொல்லிவிட்டு விசாரணை கமிஷன் அமைக்க சொல்லியதே ஓபிஎஸ் தான்.

விசாரணை கமிஷனில் இருந்து ஓபிஎஸ்-க்கு ஆஜராகும் படி சம்மன் வந்தது. அதற்கு எல்லாம் போகாமல் கடைசியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகமே இல்லை என்றார். அதோடு சசிகலா மீது தனிப்பட்ட மரியாதை இருப்பதாகவும் கூறினார். அந்த அளவுக்கு அரசியலில் துரோகம். நிறம் மாறுதல், அரசியல் துரோகி என்று கூட ஓபிஎஸ்ஐ சொல்லலாம்.

ஓபிஎஸ் டிடிவியை சென்று சந்தித்தது அதிமுகவிற்கு எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஓபிஎஸ் , சசிகலா, டிடிவி ஆகியோரை எந்த கால கட்டத்திலும் அதிமுகவுடன் சேர்ப்பதாக இல்லை. கொல்லைபுறத்தில் பாஜக மூலம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்கள்.

பாஜக அப்படி செய்ய மாட்டார்கள். அதுபோன்ற நிர்ப்பந்தத்தை பாஜக ஒரு போதும் எங்கள் மீது வைக்காது. இவர்கள் மூவருக்கும் எந்த காலத்திலும் இடம் இல்லை, எனக் கூறினார்.

ஓபிஎஸ், சபரீசன் ஐபிஎல் போட்டியின் போது சந்தித்துக் கொண்டதை பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு, கடல் கடந்து எப்படி முதலீடு செய்வது என்பதை பற்றி தான் சபரீசன், ஓபிஎஸ் ஆகியோர் பேசி இருப்பார்கள், அதோடு திருச்சியில் உங்களுக்கு (திமுகவிற்கு) ஆதரவாக மாநாடு நடத்தி விட்டேன் என்று அதற்கு நன்றி சொல்வதாக கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஓபிஎஸ் ஸ்டாலின் உடன் கொஞ்சி குலவுவதாக சசிகலாவே குற்றம் சாட்டி இருந்தார். ஓபிஎஸ்க்கு இப்பொழுது சசிகலா என்று வாய் வரவில்லை சின்னம்மா சின்னம்மா என்று தான் வருகிறது. நேற்று ஒரு வாய் இன்று ஒரு வாய். ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் இரண்டு அமாவாசைகள், இரண்டு அமாவாசைகளும் சேர்ந்துள்ளார்கள் இரண்டு அமாவாசைகள் சேர்ந்தால் மொத்த தமிழ்நாடு இருட்டாகிவிடும்.

நரி வலம் வந்தால் என்ன, இடம் வந்தால் என்ன..? எங்களை கடிக்கவில்லை. எங்களிடம் இருந்து கொண்டே ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் பேசி உள்ளார். இதை டிடிவி ஒப்புக்கொண்டார் அதற்கு நன்றி. அதிமுகவின் கதவுகள் அடைக்கப்பட்டதால் டிடிவி தினகரனை சந்திப்பது தான் ஒரே வழி என்று அங்கு சென்றுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாமதமாக வந்ததால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதமாகி உள்ளது. மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? மாணவர்களின் மனநிலை புரியாத ஒருவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருப்பது வேதனை அளிக்கிறது. பொன்முடி கார் மோதி ஒருவருக்கு அடிபட்டுள்ளது. ஆனால் அவர் காரில் இருந்து இறங்கி விசாரிக்கவில்லை. மனிதாபிமானமற்ற மிருகம் என்றுதான் அவரை சொல்ல வேண்டும்.

ஓசி என்று சொல்வது, ஓட்டு போட்டியா என்று கேட்பது, பேராசிரியர்களை திட்டுவது என்று தொடர்ந்து பல்வேறு செயல்களை செய்து வருகிறார். வழியில் விபத்து ஏற்பட்டால் நாங்கள் காரிலேயே ஏற்றி செல்வோம். இது போல் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ள மாட்டோம்.

வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் எங்களுக்கு எதிரி இல்லை. அவர்களும் தற்பொழுது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

டிஎன்பிசியில் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பை முன்னுக்கு பின் முரணாக வெளியிடுகின்றனர். இதனால் தேர்வு எழுதுவோர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிகிறது. அதிமுக ஆட்சியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்பட்டது. இப்போது, 8 மாத காலம் மேல் ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று தேர்தல் சமயத்தில் கூறினார்கள். அந்த அறிவிப்பு என்ன ஆயிற்று, என்று கேள்வி எழுப்பினார்.

Views: - 317

0

0