அமைச்சர் PTR ஆடியோ விவகாரம் ; அமைச்சர்களை மாற்றினாலும் தப்பிக்க முடியாது… ஆர்பி உதயகுமார் வார்னிங்!!

Author: Babu Lakshmanan
12 May 2023, 4:43 pm
Quick Share

மதுரை ; அமைச்சரவை மாற்றத்தோடு இது முடிவுக்கு வந்துவிடாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 69வது பிறந்த நாளை முன்னிட்டு, கழக அம்மா பேரவையின் சார்பில் அன்னதானநிகழ்ச்சி,நலத்திட்டங்கள், தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், பாண்டி முனீஸ்வரர் திருக்கோவிலில் எடப்பாடியார் பெயரில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, பொதுமக்களுக்கு அன்னதானத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் திராவிட வரலாற்றில் சாமானிய தொண்டனாக கிளைக் கழக செயலாளர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, அரை நூற்றாண்டு காலம் அன்னைத் தமிழகத்தின் மக்களுக்கு சேவையாற்றி தன்னுடைய அயராத உழைப்பால், அண்ணா திராவிட கழக நிரந்தர பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடியாரின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தொண்டர்கள் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடியாரின் பிறந நாளை முன்னிட்டு அம்மா பேரவை சார்பில் நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். தமிழகத்திற்கு நம்பிக்கை ஊட்டும் தினமாக இந்த பிறந்த தின விழா மே 12ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு நேற்றைய தினம் அழகர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு, தொடர்ந்து அறுபடை வீடுகளில் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலையில் தங்க தேர் இழுத்து பிரார்த்தனை மேற்கொண்டு, தொடர்ச்சியாக இன்று காவல் தெய்வமாக இருக்கிற பாண்டி முனீஸ்வரர் கோவிலில் அம்மா பேரவை சார்பில் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பு வழிப்பாடு செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

எடப்பாடியாரின் பிறந்த தினத்தை வறுமை ஒழிப்பு தினமாக, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாகவும், உலகத்தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற விழாவாகவும் கொண்டாடுவதற்கு கழக அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், திராவிட முன்னேற்றக் ஆட்சியில் நடைபெறும் சர்வ அதிகார ஆட்சியை, இந்த மன்னர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் எடப்பாடியார் முதல்வராக வரும் நாளே இந்த தாய் தமிழ் நாட்டின் பொன்னான நாள் என்றார்.

அமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவே அதிர்வலை ஏற்பட்டிருக்கிற சூழ்நிலையில் அதை மூடி மறைக்கின்ற, திசை திருப்புகின்ற, கவனத்தை மாற்றுகிற ஒரு செயலாக தான் இந்த அமைச்சரவை மாற்றம். அமைச்சரவை மாற்றத்தோடு இது முடிவுக்கு வந்துவிடாது. ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் இதுக்கு நிரந்தர தீர்வாக இருக்கும், என்றார்.

Views: - 267

0

0