காலாவதி கடிதங்கள்! சசிகலாவை உசுப்பேற்றுவது யார்?…
Author: Udayachandran RadhaKrishnan11 October 2021, 1:10 pm
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார். அதற்கு முன்பாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறி பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.
தாக்கத்தை ஏற்படுத்திய சசிகலா வருகை
சென்னை திரும்பியதும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து அப்போது பரபரப்பும் காட்டினார். பிப்ரவரி மாதம் 8-ம் தேதி அவர் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக சென்னை வந்தபோது வழிநெடுக அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 23 மணி நேரம் வரவேற்பு கொடுத்ததால் சசிகலா உச்சி குளிர்ந்து உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார். ஆனால் சென்னை திரும்பிய பிறகு அவரை அதிமுகவிலிருந்து ஒருவர் கூட சென்று சந்திக்கவில்லை இதனால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்ற முழக்கம் அப்படியே அடங்கிப் போனது.
அரசியலுக்கு முழுக்கு
பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை மார்ச் 3-ம் தேதி அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவராகவே அறிவித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அவருடைய ஆதரவை எப்படியும் பெற்று விடவேண்டும் என்பதற்காக அமமுக வேட்பாளர்கள் சசிகலா சென்ற கோவில்களுக்கு எல்லாம் அவரைப் பின்தொடர்ந்தனர்.
தினமும் வெளியான ஆடியோ
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்பு மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அந்தர் பல்டி அடித்தார். தனது ஆதரவாளர்களுடன் போனில்
பேசி தினமும் அதை ஆடியோவாகவும் வெளியிட்டு வந்தார். அவர் இப்படி வெளியிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் ஊடகங்களில் வெளியானதே தவிர, அவருக்கு தனிப்பட்ட முறையில் எந்த பலனையும் தரவில்லை.
ஒரு ஆடியோவில் நான் எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறி இருக்கிறேன். எம்ஜிஆரும் அதைக்கேட்டு அப்படியே நடந்துகொள்வார் என்று ‘ரீல்’ சுற்றி தமிழக மக்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்கவும் வைத்தார். கடந்த 2 மாதங்களாக அமைதியாக இருந்தவர் தற்போது மீண்டும் அரசியலுக்கு வருவேன் என பரபரப்பு காட்டி இருக்கிறார்.
ஆதரவாளர்களுக்கு எழுதிய கடிதம்
தனது ஆதரவாளர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கட்சி வீணாவதை ஒரு நிமிடம்கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எல்லோரும் அதிமுக பிள்ளைகள்தான். அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கட்சித் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தொண்டர்களை ஒரு தாய் போல அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழல் இல்லை. விரைவில் வருகிறேன், அனைவரையும் சந்திக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இனி இதுபோல் அவர் தொடர்ந்து காலாவதி நிலை கடிதங்களை எழுதலாம்.
அதிமுக தொடங்கப்பட்டு வரும் 17-ம் தேதியோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அக்கட்சியின் பொன்விழாவை கொண்டாடும் பணிகளில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவர் பன்னீர்செல்வமும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகளும் நடந்துள்ளன.
16ஆம் தேதி சசிகலா முக்கிய அறிவிப்பு?
இந்நிலையில்தான் வருகிற 16-ம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கும் மறுநாள் ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்குச் செல்லவும் அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது அதிமுக தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது பற்றி பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன கடைசி முயற்சியாக ஒரு முறை அதிமுக தலைமையுடன் மோதி பார்த்துவிடலாம் என்ற முடிவில் அவர் இப்படி அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
அமமுகவில் ஐக்கியமாகும் சசி?
அதேநேரம் அவரால் அதிமுகவில் நுழையவே முடியாது. அதனால் சசிகலா அமமுக தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு எதிர்வரும் எல்லாத் தேர்தல்களிலும் தனது அக்காள் மகன் தினகரனுக்கு வெற்றிக் கனியை பறித்து தருவார் என்று அமமுகவில் எஞ்சியிருக்கும் சிலர் நம்புகின்றனர்.
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்குள் திமுகவை எதிர்க்கும் வலுவான கட்சியாக அமமுகவை சசிகலா உருவாக்கி விடுவார், சென்னை உள்பட 15 மாநகராட்சிகளிலும் திமுகவையும், அதிமுகவையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி தமிழக மக்களிடம் தனக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கை அவர் நிலை நிறுத்துவார். எம்ஜிஆருக்கு, தான் அரசியல் ஆலோசனை கூறியதை உண்மை எனவும் நிரூபிப்பார். அதிமுக தலைமைக்கும் சரியான பாடம் புகட்டுவார்” என்றும் அமமுகவினர் மிகுந்த குஷியில் உள்ளனர்.
திமுகவின் பகடைக்காய் சசிகலா
அதிமுகவின் சிந்தனையோ வேறு மாதிரியாக உள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரி கூறும்போது, “சசிகலா இதேபோல், பலமுறை சபதம் விடுத்துப் பேசியும் அது எடுபடவில்லை. தற்போது மீண்டும் ஒரு கலகத்தை உருவாக்க பார்க்கிறார். இதன் பின்னணியில் தி.மு.க இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். அவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது. மிடாஸ் உள்பட வணிகரீதியாகவும் திமுகவின் தயவு அவர்களுக்குத் தேவை உள்ளது. அதனால்தான் இதுபோன்ற பயமுறுத்தல்களை ஏற்படுத்தப் பார்க்கிறார். அ.தி.மு.கவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அதிமுகவுக்கு உரிமை கோரி டெல்லி ஹைகோர்ட்டிலும், சுப்ரீம்கோர்ட்டிலும் சசிகலா போட்ட வழக்குகள் எல்லாம் தள்ளுபடி ஆகிவிட்டன. அதற்கு மாறாக சென்னை சிவில் கோர்ட் தீர்ப்பு கொடுக்கும் என எதிர்பார்க்க முடியுமா என்ன? அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவை கேள்வி கேட்க முடியாது என்ற தீர்ப்பும் வந்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு குறுக்கு வழிகளை திமுக கையாண்டது. அதன் தோல்வி பயத்துக்கு காரணம், அதிமுக வலுவாக இருப்பதுதான். அதனால் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாக சசிகலாவை பகடைக்காயாக தி.மு.க பயன்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.
அரசியல் விமர்சகர்கள் விமர்சனம்
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும் போது “சசிகலா மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாக கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவரை யாரோ உசுப்பேற்றி விட்டிருக்கிறார்கள். அவர் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னைக்கு வந்து 9 மாதங்கள் ஆகிவிட்டது. அவரை நம்பி அதிமுகவில் இருந்து ஒரு நிர்வாகிகள் கூட செல்லவில்லை.
தொண்டர்கள் அவர் இருக்கும் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
வலுவான கட்டமைப்பை கொண்ட அதிமுகவால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்பது சசிகலாவுக்கு தெரியும். அதேபோல் அதிமுகவில் யாரும் தன்னை ஆதரிக்கவில்லை என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் முன்பு தினகரன் செய்த வேலையை தற்போது சசிகலா செய்ய நினைக்கிறார். அவருடைய இந்த வீண் முயற்சி யாருக்கு சாதகமாக அமையும் என்பதை அதிமுக தொண்டர்கள் நன்கு அறிவார்கள்.
ஜெயலலிதாவுக்கு சசிகலா தோழியாக மட்டுமே இருந்தார். ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, அதிமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் அவரை சந்தித்ததால் தன்னை ஒரு மாபெரும் ஆளுமையாக அவர் கருதிக் கொண்டார். அவரை பின்னால் இருந்து இயக்கியதும், இயக்குவதும் தினகரன்தான். கட்சி சசிகலாவிடம் சென்றால் என்ன கதியாகும் என்பது அதிமுகவினர் அனைவருக்கும் தெரியும். அதனால் அவருடைய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
பகல் கனவும் பலிக்காது.
ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது
எம்ஜிஆர் யாரை எதிர்த்து அதிமுகவை தொடங்கினாரோ, ஜெயலலிதா யாரை எதிர்த்து கடைசிவரை அரசியல் செய்தாரோ அவர்களுக்கு ஆதரவாக நடந்துகொண்டால் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரின் ஆன்மாவும் சசிகலாவை மன்னிக்கவே மன்னிக்காது.
நமது தந்திர வேலைகள் யாருக்குமே தெரியாது என்று அவர் நினைத்தால் அதைப் போல் முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது.
சசிகலா, பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்தபோது சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சுகவாசியாக இருந்துள்ளார் என்ற வழக்கு அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகளோ, 4 வருடங்களோ ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம். இதுதவிர நிலுவையில் உள்ள 3 அந்நிய செலாவணி மோசடி வழக்குகளிலும் தண்டனை பெற்று சசிகலா ஜெயிலுக்கு போவதும், வருவதுமாக இருந்தால் என்னவாகும்?…
எனவே எதார்த்ததை உணர்ந்து அதிமுகவை அழிக்க நினைக்கும் வஞ்சகர்கள் விரிக்கும் வலையில் விழாமல், சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே அவருக்கு நல்லது. அதுதான் புத்திசாலித்தனமும் கூட” என்று அவர்கள் ‘அட்வைஸ்’ செய்தனர்.
0
0