நவம்பர் வரை விலையில்லா கூடுதல் அரிசி : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!!

6 August 2020, 11:24 am
edappadi palanisamy erode - UpdateNews 360
Quick Share

வரும் நவம்பர் மாதம் வரையிலும் ரேசன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.8.69 கோடி மதிப்பிலான 42 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, 3,500 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். அதோடு, ரூ.8.88 கோடி மதிப்பிலான புதி கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது, கொரோனாவை எதிர்த்து சிறப்பாக பணியாற்றி வரும் ஆட்சியர்கள், மருத்துவர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 43,578 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

அரசு அறிவிக்கும் வழிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் முறையாக கடைபிடித்தால், நோய் பரவலை குறைக்க முடியும். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மீண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பலி எண்ணிக்கையும் குறைவு.
தடுப்பு மருந்து இல்லாத சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கொரோனா ஊரடங்கு சமயத்திலும் விவசாயப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் பல நிறுவனங்கள் தொழில் தொடங்கின. நூற்பாலைகளின் பெருக்கத்தால், வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும். மேலும் திண்டுக்கல்லில் இன்னும் பல தடுப்பணைகள் கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி, விலையில்லா ரேஷன் பொருட்கள் தொடர்ந்து 3 மாதங்கள் வழங்கப்பட்டது. நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படும், எனக் கூறினார்.