இதுலயும் மோசடியா..? ஊசியில் மருந்துக்கு பதிலாக தண்ணீர்… போலி தடுப்பூசி முகாம் நடத்தி பல லட்சம் அபேஷ்..!!

Author: Babu
25 June 2021, 4:00 pm
Corona_Vaccine_India_UpdateNews360
Quick Share

போலி தடுப்பூசி முகாம் நடத்தி, 2000 பேருக்கு மருந்துக்கு பதிலாக ஊசியில் தண்ணீரை நிரப்பி தடுப்பூசி போட்டதாக மோசடி செய்த 8 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான் எனக் கருதி, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், மும்பை மாநகரில் உள்ள குடியிருப்பு முகாமில் தனியார் மருத்துவமனை முகாம் எனக் கூறி கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக தண்ணீரை ஊசியில் நிரப்பி பொதுமக்களுக்கு செலுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 30ம் தேதி இந்த குடியுருப்பு சார்பில் தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்து, தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. இதில், ஒருவருக்கு ரூ.1,260 வீதம் 390 பேருக்கு மொத்தம் ரூ.4,56,000 வசூலிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 120 பேருக்கு வெவ்வேறு மருத்துவமனையின் பெயரில் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சான்று கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டு விசாரித்ததில், இதுபோன்ற முகாம் போடவே இல்லை என்று அவர்கள் பதிலளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, ஏமாந்து போனதை உணர்ந்த குடியிருப்புவாசிகள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பெயரில், நடத்தப்பட்ட விசாரணையில், செலுத்தப்பட்டது தடுப்பூசி அல்ல, தண்ணீர் என்பது தெரியவந்தது.

இதேபோன்று மும்பை மாநகரில் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2,000த்திற்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், 8 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 297

0

0