‘யாராவது காப்பாத்துங்க’… அலறிய ஓடிய பிரபல ரவுடி.. நடுரோட்டில் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

Author: Babu Lakshmanan
27 August 2022, 10:01 am
Quick Share

சென்னை அருகே பிரபல ரவுடி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயப்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடியான சந்தீப்குமார் (30) மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று மாலை அண்ணாநகர், மடுவாங்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அங்கு, உறவினர்களிடம் பேசிவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

இதனைக் கண்ட 10 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து, அரிவாள், பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட முயன்றது. இதனால், அதிர்ந்து போன அவர், தன்னை யாராவது காப்பாற்றுமாறு அலறி கூச்சலிட்டு நடுரோட்டில் ஓடியுள்ளார். ஆனால், யாரும் உதவ முன்வராததால், அந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது.

அதில், படுகாயமடைந்த சந்தீப் குமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்து அந்த மர்ம கும்பல் ஓட்டம் பிடித்தது. இது குறித்து தகவலறிந்த அண்ணாநகர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தீப்பின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2018ல் ரவுடி ஆதித்யா என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று விட்டு வெளியே வந்த சந்தீப் குமாரை பழிக்குபழி தீர்க்க இந்தக் கொலை நடந்ததா..? அல்லது நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்த கொலை அரங்கேற்றப்பட்டதா..? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 200

0

0