மத்திய மந்திரிசபை விரிவாக்கம்: எல்.முருகன் எடுத்த புதிய அவதாரம்: ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடம்

7 July 2021, 10:12 pm
Quick Share

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 2019 நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியபின் மே 30-ம் தேதி, புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. அதில் 21 பேர் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள் ஆவர். 9 பேருக்கு தனி இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. 23 பேர் இணை அமைச்சர்களாக அப்போது பதவி ஏற்றுக் கொண்டனர். அதாவது மொத்தம் 53 அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில்15 சதவீதம் பேர் வரை அமைச்சரவையில் இடம் பெற முடியும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் பிரதமரையும் சேர்த்து 81 அமைச்சர்கள் இருந்திருக்கவேண்டும். ஆனால் 27 பேர் குறைவாக இருந்தனர்.

மேலும் கடந்த 2 வருடங்களாக அமைச்சரவை எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே நீடித்து வந்தது. இதற்கிடையே பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா, சிரோமணி அகாலி தளம் கட்சிகள் விலகிக் கொண்டதால் அவற்றின் சார்பில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோரின் மரணம் காரணமாக மூத்த அமைச்சர்கள் பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், நரேந்திர சிங் தோமர் போன்றோர் கூடுதல் இலாகாக்களை கவனித்துவந்தனர். சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் அமைச்சராக இருந்த தாவர் சந்த் கெலாட் இரு தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவை எந்த நேரத்திலும் விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் நடக்கவிருந்த மத்திய அமைச்சரவை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், மாலையில் அமைச்சரவை விரிவாக்கம் என்பது உறுதியானது. மேலும் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்த ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உட்பட 12 பேர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் மோடி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை எளிய முறையில் நடந்தது.

அப்போது 20 மாநிலங்களைச் சேர்ந்த 43 பேருக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரையும் சேர்த்து தற்போது மொத்தம் 77 மத்திய அமைச்சர்கள் உள்ளனர். முன்னதாக புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பவர்கள் பட்டியலை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டபோது, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பற்றிய குறிப்பில் தமிழ்நாட்டின் கொங்குநாடு என்று சிறப்பு அடைமொழி கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது முருகன் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிவிக்கும் விதமாக இப்படி குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதேபோல பதவியேற்க ஜனாதிபதி அவரை அழைத்தபோது, டாக்டர் முருகன் என்று சிறப்பித்ததும் ஒரு தமிழருக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக இருந்தது. மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றுள்ள 44 வயது முருகன் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த கோனூர் கிராமத்தில் பிறந்தவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாக தெரியும். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்டத்தையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை சட்டப்பட்டமும் பெற்றுள்ளார். சட்டப் படிப்பில் டாக்டரேட் பட்டமும் பெற்றவர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்தும் இருக்கிறார். சென்னை ஐகோர்ட்டில் 15 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.

புதிய கேபினட் அமைச்சர்களில், குறிப்பிடத் தக்க பிரபலம் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆவார். டெல்லி மேல்-சபை எம்பியாக உள்ள 50 வயது ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நகரைச் சேர்ந்தவர். அரச குடும்பத்தில் பிறந்த இவருடைய தந்தை மாதவராவ் சிந்தியா பிரபல காங்கிரஸ் தலைவர் ஆவார். ஜோதிராதித்ய சிந்தியா 18 மாதங்களுக்கு முன்பு, மத்திய பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவை ஆளும் கட்சியாக அரியணையில் உட்கார வைத்த பெருமைக்கு உரியவர். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.

தற்போது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப் பட்டவர்களுக்கு பாஜக மேலிடம் அடுத்த ஆண்டு கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட், உத்தரபிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி களப்பணிகளை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது பற்றி, பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து பாஜக சார்பில் யாரும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையிலும் பிரதமர் மோடி, எல். முருகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். இதை அவருடைய கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்றே சொல்ல வேண்டும்.

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்யாத பகுதிகளே கிடையாது. இன்று கிராமங்களில் கூட பாஜக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் எல்.முருகன்தான். தமிழகத்தில் இனி ஒருபோதும் தாமரை மலரவே செய்யாது என்று ஏளனம் செய்தவர்களின் முகத்தில் அவர் கரியைப் பூசினார். 20 வருடங்களாக தமிழக சட்டப்பேரவையில் பாஜக பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில், எல்.முருகன் ஆற்றிய கடுமையான தேர்தல் பணிகளால் தற்போது பாஜகவுக்கு 4 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். அவர் மத்திய அமைச்சர் என்னும் புதிய அவதாரத்திலும் மிகச் சிறப்பாக செயல்படுவார்.

இதேபோல்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழக பாஜகவுக்காக தீவிர களப்பணி ஆற்றிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு கவர்னர் பதவி தேடி வந்தது” என்று மகிழ்ச்சி தெரிவித்தனர். தற்போது எல்.முருகன் எம்பியாக இல்லாத நிலையில் அவர் எந்த மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

Views: - 118

1

0