ஒயிட் போர்ட்’ பஸ்சில் இலவசம்: உள்ளூர் மினி பஸ்களில் மகளிருக்கு கட்டணம்: கண்டக்டர்களுடன் மல்லுக்கட்டும் பெண்கள்

22 June 2021, 10:04 pm
Quick Share

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப் பட்டிருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் தற்போது பஸ் போக்குவரத்து, இயக்கப்பட்டு வருகிறது.இதில் உள்ளூர் பேருந்துகள் என்று அழைக்கப்படும் டவுன் பஸ்களே பெருமளவில் ஓடுகின்றன. சென்னை நகரைப் பொறுத்தவரை சாதாரண, மினி,விரைவு தாழ்தள சொகுசு, குளிர்சாதன பஸ்கள் என 4 ஆயிரம் உள்ளூர் பஸ்கள் உள்ளன. இவற்றில் 300 பஸ்கள் மினி பஸ்கள் ஆகும். சென்னையில் மாநகர பஸ்களை இயக்க முடியாத உட்புற பகுதிகளில் வசிப்போர் நலன் கருதி, மினி பஸ் சேவை கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உட்புற பகுதிகளில் இருந்து ரயில், பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில், இந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் சாதாரண உள்ளூர் பஸ்களை விட கட்டணம் 4 ரூபாய் வரை அதிகமாக இருக்கும். இந்த மினி பஸ்களிலும் ஒயிட் போர்டுகள்தான் பொருத்தப்பட்டிருக்கும். அரசு மினி பஸ்களில் கட்டணம் சற்று கூடுதல்தான் என்றாலும் கூட அதை அதிக கட்டணம் செலுத்தி ஷேர் ஆட்டோக்களிலும், மினி வேன்களிலும் நெருக்கியடித்துக்கொண்டு பயணிப்பது தவிர்க்கப்படும்.இந்த நிலையில்தான், கிட்டத்தட்ட சென்னையில் ஒரு மாதத்திற்கு பின்பு அனைத்து வித உள்ளூர் பஸ்களும் ஓடத் தொடங்கி இருப்பதால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. இருசக்கர வாகனங்களில் பயணித்து அலுவலகம் செல்வது தவிர்க்கப்படுதால் பெட்ரோலுக்கு செலவிடப்படும் தொகை பலருக்கு கணிசமாக மிச்சம் ஆகிறது.

இரண்டாவதாக, உள்ளூர் பஸ்களில் குறிப்பாக ஒயிட் போர்ட் மாட்டிய பஸ்களில் பெண்கள்
இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதி நடைமுறைக்கு வந்திருப்பது ஆகும். ஆனால் உள்ளூர் பஸ் போக்குவரத்து தொடங்கிய முதல் நாளே சென்னையில் பல இடங்களில் பெண் பயணிகள் தொடுத்த கேள்விக் கணைகளால் பஸ் கண்டக்டர்கள் திக்குமுக்காடித்தான் போனார்கள். ஒயிட் போர்ட் மாட்டியிருந்த சாதாரண பஸ்களில் பெண்களுக்கோ திருநங்கைகளுக்கோ மாற்றுத்திறனாளிகளுக்கோ எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒயிட் போர்ட் மாட்டியிருந்த மினி பஸ்களில் பயணம் செய்த பெண்களால்தான் கண்டக்டர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை நகரில் கலர் கலராகவும், வித விதமாகவும் உள்ளூர் பஸ்கள் ஓடுகின்றன. இதனால்தான் என்னவோ, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும்போது பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக போக்கு வரத்து கழகம் முன் ஜாக்கிரதையாக ஒயிட் போர்ட் பொருத்திய பஸ்களில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற ஒரு விளக்க குறிப்பை முதலில் வெளியிட்டது. அதன்பிறகு மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களும் இந்த பஸ்களில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யலாம் என்று அரசு அறிவித்தது.அப்படி இருந்தும் கூட பெண் பயணிகளில் பலர் வெள்ளை போர்டு மாட்டிய மினி பஸ்ஸில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கண்டக்டர்களுடன் மல்லுக்கட்டிய காட்சிகளை சென்னையில் பல இடங்களில் காண முடிந்தது.

படித்த பெண்களில் சிலர், “திமுக தேர்தல் அறிக்கையில், உள்ளூர் பஸ்கள் அனைத்திலும் பெண்களுக்கு இலவசம் என்று சொன்னார்களே, இப்போது டிக்கெட் எடுக்க சொல்கிறீர்களே இது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பி கண்டக்டர்களை மடக்கினர். கண்டக்டர்களோ, “எங்களுக்கு அப்படி எந்த உத்தரவும் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை. ஒயிட் போர்ட் மாட்டி இருந்தாலும் மினி பஸ்களில் பெண்கள் டிக்கெட் எடுத்துதான் ஆகவேண்டும்” என்று கறார் காட்டினர். வளசரவாக்கத்திலிருந்து, கோயம்பேடுக்கு மினி பஸ்சில் பயணம் செய்த ஒரு மூதாட்டி முன்பைவிட கட்டணம் அதிகமாகியிருக்கிறதே என்று முணுமுணுத்தார்.

இத்தனைக்கும் சென்னை நகரில் தற்போது குறைந்த அளவில்தான் உள்ளூர் பஸ் போக்குவரத்து நடக்கிறது. முழுவீச்சில் மீண்டும் போக்குவரத்து தொடங்கும்போது இன்னும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ என்று கண்டக்டர்கள் கவலை கொண்டுள்ளனர். இதுபற்றி சமூகநல ஆர்வலர்கள் கூறும்போது, “திமுகவின் தேர்தல் அறிக்கையில் 501-வது வாக்குறுதியாக தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என்று பொதுவாகத்தான் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் அனைத்து உள்ளூர் பஸ்களிலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்றுதான் அர்த்தம். இந்த வாக்குறுதியால் ஈர்க்கப்பட்டும் பெண்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக இதன் மூலம் 40 ரூபாய் வரை மிஞ்சும். அதை மனதில் வைத்தும் அவர்கள் நிச்சயம் திமுகவுக்கு வாக்களித்திருப்பார்கள்.

விரைவு பேருந்து, சொகுசு பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணம் வசூலிப்பது ஏற்கக் கூடியதுதான் என்றே வைத்துக் கொண்டாலும் கூட ஒயிட் போர்டுகளுடன் ஓடும் மினி பஸ்களில் கூட ஏன் கட்டணம் வாங்கவேண்டும். இப்படி லாபத்தை மட்டுமே முக்கியமாகக் கருதி அரசு மினி பஸ்களை இயங்கினால் மககளுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல திட்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும். மினி பஸ் போன்ற அத்தியாவசிய தேவைகள் சுவடில்லாமல் காலப்போக்கில் அழிந்தும் போய்விடும்” என்றனர். இது குறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது,
“ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதுதான் 2013-ம் ஆண்டு சென்னையில் மினி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதை அடியோடு முடக்குவதற்குத்தான் திமுக அரசு திட்டமிட்டு செயல்படுவதுபோல உள்ளது. திமுக எப்போதுமே தேர்தல் அறிக்கையில் சொல்வது ஒன்றாக இருக்கும்.

ஆட்சிக்கு வந்தபின் அதை செயல்படுத்தும்போது வேறு ஒன்றாக இருக்கும். தேர்தலுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறினீர்களே, இப்போது ஏன் குறைக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேட்டால் தமிழக நிதியமைச்சர் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றுவோம் என்று ஏதாவது தேதி போட்டாங்களா? என்று கேட்கிறார். ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. இதை உண்மை என்று நம்பி இளைஞர்கள் அதிகளவில் ஓட்டு போட்டனர். ஆனால் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் என்ன சொல்கிறார்கள்? இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கிறது. எனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் பங்கேற்க பயிற்சி தொடர்கிறது என சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகிறார்.

அதாவது இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்கும் என்பது தெரிந்தே தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். அதுபோல்தான் இப்போது ஒயிட் போர்டு டவுன் பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்பதும். மினி பஸ்களிலும் ஒயிட் போர்ட் தானே மாட்டப்பட்டிருக்கிறது என்று கேட்டால் இப்போது மழுப்புகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தெரிந்தே பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது திமுகவுக்கு ஒன்றும் புதிய விஷயம் அல்ல. 2006-ல் திமுக வந்தபோது ஏழை விவசாயிகள் 5 லட்சம் பேருக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று கருணாநிதி கூறினார். ஆனால் யாருக்காவது நிலம் கிடைத்ததா? என்றால் இல்லை. அதுபோல்தான் தற்போது கொடுத்துள்ள பல வாக்குறுதிகளும் நிறைவேறாமல் போகும்” என்று அந்த அதிமுக நிர்வாகி குறிப்பிட்டார்.

Views: - 155

0

0