9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Author: Udhayakumar Raman
26 September 2021, 9:09 pm
Quick Share

சென்னை: 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சென்ற ஆட்சியில் புதியதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்புக்களை வெளியிட்டது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. பதிவான வேட்புமனுக்கள் 23 ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டன.நேற்று வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறக் கால அவகாசம் இருந்தது.எனவே இன்று தமிழக தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9 மாவட்டங்களில் பெறப்பட்ட 98.151 வேட்பு மனுக்களில் 1,166 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தவிர 14,571 பேர் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் 2,981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இறுதி பட்டியலின்படி 138 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 827 பேரும், 1376 ஒன்றிய குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 6,064 பேரும், 2,779 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கு 10,792 பேரும், 19,705 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 61,750 பேர் போட்டியிடுகிறார்கள். மொத்தத்தில் 23,998 பதவியிடங்களுக்கு 79,433 பேர் போட்டியிடுகின்றனர். இதைத் தவிர இந்த தேர்தலுடன் ஏற்கனவே ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த 28 மாவட்டங்களில் விடுபட்ட இடங்களுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு 1,386 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Views: - 102

0

0