போக்கு காட்டிய டி23 புலியை நெருங்கிய வனத்துறை…. ஒருசில மணிநேரங்களில் ஆபரேசனை வெற்றிகரமாக முடிக்கத் திட்டம்..!!

Author: Babu Lakshmanan
5 October 2021, 11:53 am
Quick Share

நீலகிரி : மனிதர்களை தொடர்ந்து வேட்டையாடி வந்த டி23 புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் நெருங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா மற்றும் மசினகுடி பகுதியில் 4 பேரை கொன்ற T23 என அடையாளப்படுத்தப்பட்ட ஆட்கொல்லி புலியை பிடிக்க தமிழக மற்றும் கேரள வனத்துறையினர், தமிழக அதிரடிப்படை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் என 150-க்கும் மேற்பட்டோர் பல குழுக்களாகப் பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ட்ரோன் கேமராக்களை வனத்திற்குள் பறக்க விட்டு, புலி இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். புலி எங்கு இருக்கிறது என்பதை கண்டறிய சிப்பிப்பாறை வகையை சேர்ந்த அதவை என்ற நாயையும் வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மசினகுடி பகுதியில் புலியை கண்காணிக்கும் வகையில் மேலும் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். மொத்தமாக 55 கேமராக்கள் மூலம் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்கிறார்கள்.

ஆட்கொல்லி புலியுடன் மேலும் 4 புலிகளின் நடமாட்டம் இருப்பதால் தவறுதலாக அதனை சுட்டு விட வேண்டாம் என அதிரடி படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால், புலி எக்காரணக் கொண்டும் சுட்டுக்கொல்லப்படாது என தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 11 நாள் தீவிர தேடுதல் வேட்டையின் பயனாக சிங்காரா வனப்பகுதியில் டி23 புலியை வனத்துறையினர் தற்போது சுற்றி வளைத்துள்ளனர். மயக்க மருத்து கொடுத்து புலியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் புலி பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 236

0

0