அன்றோ இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்..! இன்றோ தினக்கூலி..! ஒரு கிரிக்கெட் வீரரின் சோகக்கதை..!

28 July 2020, 10:18 pm
Rajendra_Singh_Dhami_Updatenews360
Quick Share

இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஜேந்திர சிங் தாமி இப்போது தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து, அவருக்கு ஆதரவாக உதவ இந்திய ஒலிம்பிக் சங்கம் முன்வந்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா, “நாங்கள் இன்று ரூ 50,000 உடனடி உதவியை அறிவித்துள்ளோம். அவருடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் அவை உடனடியாக கவனிக்கப்படும். உத்தரகண்டில் உள்ள எங்கள் மாநில அமைப்போடு பேசினேன். ஒவ்வொரு உதவியும் ஆதரவும் அவருக்கு வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்.

தற்போது உத்தரகண்ட் சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை வகிக்கும் தாமிக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் போன் செய்துள்ளனர்

“பித்தோராகர் மாவட்ட ஆட்சியர் என்னை சந்திக்க விரும்புகிறார் என்று அவர்கள் சொன்னார்கள். ஆட்சியர் அவர்கள் எனக்கு என்ன செய்ய முடியும் என்பதை அறிய விரும்புகிறார்கள் என்று சொன்னார்கள். விரைவில் அவரை சந்திக்க செல்வேன்” என்று தாமி கூறினார்.

பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ராய்கோட் கிராமத்தில் வசிக்கும் தாமி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்திற்காக கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

பித்தோராகர் மாவட்ட ஆட்சியர் விஜய் ஜோக்தாண்டே கூறுகையில், “நாங்கள் தாமியைத் தொடர்பு கொண்டுள்ளோம். அவருக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரின் உதவி வழங்கப்படுகிறது. முகமந்திர ஸ்வரோஜ்கர் யோஜ்னா அல்லது பிற திட்டங்களின் கீழ் அவருக்கு வேலை வழங்குவதற்கான விருப்பங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.” எனத் தெரிவித்தார்.

எனினும், தற்போது வரை மாவட்ட நிர்வாகத்திடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் வந்த தொலைபேசி அழைப்புகளைத் தவிர வேறு எந்த பண உதவியும் தாம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

“எனது சோகக் கதை வெளியான பிறகு, பல்வேறு பகுதிகளிலிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. எனது நிலை குறித்து மக்கள் கேட்கிறார்கள், எனக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர்” என்று தாமி மேலும் கூறினார்.

தாமியின் குடும்ப வருமானம் தற்போது ரூ 3,000’ஐ தாண்டவில்லை. அவரும் அவரது 65 வயதான தந்தையும் தினசரி கூலிகளாக வேலை செய்து வருகின்றனர்.

2012’ஆம் ஆண்டில் மாநில மாகாண சேவைத் தேர்வுகளுக்கு (பிசிஎஸ்) தகுதி பெற்ற தாமி, தனது தகுதியைக் கருத்தில் கொண்டு தனக்கு வேலை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் வரலாற்றில் முதுகலை பட்டமும், இளங்கலை கல்வியியல் பட்டமும் (பி.எட்) பெற்றுள்ளார்.

மேலும் கடந்த 2015’ல் அவருக்கு அரசு வேலை தருவதாக அன்றைய மாநில அரசு உத்தரவாதம் அளித்திருந்த நிலையில் தற்போது வரை வேலை வழங்கவில்லை. இந்த விஷயத்தில் சம்பத்தப்பட்ட நபர்கள் உடனடியாகத் தலையிட்டு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.