முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : வீடுகளின் முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்.. போலீசாருடன் தள்ளுமுள்ளு..!!

Author: Babu Lakshmanan
13 September 2022, 10:32 am
Quick Share

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் வடவள்ளி பகுதியிலுள்ள மாநகராட்சி ஒப்பந்ததாரரும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் 500 கோடி ஊழல் புகார் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட 10 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினரான திருச்சி மேல புலிவார்டு சாலையில் உள்ள மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான கணேசா டிரேடர்ஸ் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் திருச்சி திருவானைக்காவல் உள்ள கணபதி நகரில் ஒருவரது வீட்டிலும் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேசன் தலைமையிலான சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு வீட்டின் முன்பு கூடியிருந்த கோவை மாவட்ட 7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான தாமோதரன், அம்மன் அர்ஜுனன், பி ஆர் ஜி அருண்குமார், கே ஆர் ஜெயராமன், அமுல் கந்தசாமி,விபி கந்தசாமி, ஏகே செல்வராஜ் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

கைது செய்யும் போது போலீஸாருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு நிலவியது.

இதேபோல, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த சோதனையை கண்டித்து அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளின் முன்பு குவிந்து வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இதுபோன்ற சோதனைகளை திமுக அரசு அடிக்கடி ஏவி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Views: - 499

0

0