பட்டத்து இளவரசர் உதயநிதி… 4 மணிநேரம் காத்திருந்த மக்கள் : போட்டோஷுட்டுக்கு பிறகு பெட்டியைக் கட்டிய திமுகவினர் : ஜெயக்குமார் விமர்சனம்

Author: Babu Lakshmanan
18 November 2021, 4:55 pm
jayakumar - udhayanidhi - updatenews360
Quick Share

சென்னை : கும்மிடிப்பூண்டி அருகே திமுகவினர் ஏற்பாடு செய்த நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு உதயநிதி தாமதமாக வந்ததால், பொதுமக்கள் 4 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும், மோட்டரை கொண்டு வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

தற்போது, சென்னை மெல்ல மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனிடையே, வெள்ள பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு அரசின் சார்பில் ஒருபுறம் நிவாரண உதவிகளை செய்து வந்தாலும், அதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் களத்தில் இறங்கி, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருகின்றனர். அதேவேளையில், திமுகவினரும் தனது பங்கிற்கு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கும்மிடிப்பூண்டியில் வெள்ளம் பாதித்தவர்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இந்த நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக சொன்ன நேரத்திற்கு பொதுமக்கள் குவிந்த நிலையில், சுமார் 4 மணிநேரம் தாமதமாக உதயநிதி வருகை புரிந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது.

இந்த நிலையில், உதயநிதியின் இந்த தாமதத்தால் மக்கள் அவதிப்பட்டதால் கொதித்தெழுந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கிண்டலடித்து டுவிட்டரில் பதிவை போட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது ;- பசுவின் கன்றைத் தேரோட்டி கொன்ற தன் மகனைத் தேர் ஏற்றிக் கொன்ற நீதி பிறழா பெருமிதத்துக்குச் சொந்தக்காரர்களான தமிழர் மண்ணில்… பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக கும்மிடிப்பூண்டியில் பாமர மக்களை நான்கு மணி நேரமாகக் காத்திருக்க வைத்ததில் பாவம் அந்த மக்கள்… வெந்த புண்ணில் வேல் பாய்ந்த அவஸ்தைக்கு ஆளானார்கள்.

இரவு ரோந்து பணியைத் தொடர்ந்து இடைவிடாத பாதுகாப்புப் பணிச்சுமை காரணமாகக் காவலர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்… நிவாரணப் பொருட்களை எல்லாம் காட்சிக்கு வைத்து போட்டோஷுட் நடத்தி முடிந்ததும் வண்டியை ஏற்றி திமுகவினர் தாங்களே எடுத்துக் கொண்ட அவலம்…. நூறு நாளில் நீதி தருவதாகச் சொல்லி கோட்டையில் ஆளும் மனு வாங்கிய மன்னன் தரும் விடியல் இதுதானா என்று மக்கள் மனம் குமுறுகிறார்கள், எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவோடு, ஒரு வீடியோவையும் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், கும்மிடிப்பூண்டியில் உதயநிதியின் வருகைக்காக காலை 9 மணிக்கு பாதுகாப்பு வந்த போலீசாரில் ஒருவர் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால், மயங்கி விழுந்துள்ளார். முதலில் உதயநிதி குறித்து விமர்சிக்க முனைந்த அவரை, சக காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், அவர் நன்றாக இருப்பதாகக் கூறி விட்டு, அங்கிருந்து காவலர் வேனில் ஏறிச் சென்றார்.

இத்தனை சம்பவங்களுக்குப் பிறகும், மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்களை, நிகழ்ச்சி முடிந்ததும், மக்களுக்குக் கொடுக்காமல் திமுகவினரே எடுத்துச் சென்றதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இருப்பினும், அங்கே என்ன நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால், நிவாரணப் பொருட்களை மீண்டும் வேனில் ஏற்றும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 671

0

0