திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு: அதிரடி திருப்பமாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கைது…!!

12 November 2020, 9:59 am
balaji - updatenews360
Quick Share

சென்னை: வேலை வாங்கி தருவதாக ரூ.1.62 கோடி மோசடி வழக்கில் சென்னை போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், 2011-16ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசின் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றினார். இக்காலகட்டத்தில் போக்குவரத்து துறையில் 81 பேருக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.62 கோடி பணம் மோசடி செய்துவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடி வழக்கு குறித்து விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி புகாரில் சென்னை போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசன் பெயர் பெரிதளவில் அடிபட்டது. இதனை தொடர்ந்து சென்னை, முகப்பேர் ஜீவன் பீமா நகரில் உள்ள அவரது வீட்டில் பல மணி நேரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

இதன் பின்னர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இதனை தொடர்ந்து, 2ம் கட்டமாக நேற்று போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசனிடம் மீண்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் பண மோசடி நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று இரவு அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில், 54 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.4 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரத்து 892 ரொக்கப்பணம், 519 பவுன் நகை, 6½ கிலோ வெள்ளி மற்றும் வங்கி இருப்பு விவரங்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 61

0

0