எகிறிய கேஸ் சிலிண்டர் விலை… ரூ.100 மானிய எதிர்பார்ப்பில் குடும்பத் தலைவிகள்.. தமிழக அரசு கை கொடுக்குமா…?

2 July 2021, 9:42 pm
gas price - updatenews360
Quick Share

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை பொறுத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை அவ்வப்போது நிர்ணயம் செய்கின்றன.

5 மாதத்தில் ரூ.115 உயர்வு

அந்தவகையில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானிய சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலை கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரம் 735 ரூபாயாக இருந்தது. அந்த மாதத்தில் மட்டும் 3 முறை விலை உயர்த்தப்பட்டதால் 810 ரூபாய் என்ற அளவிற்கு சென்றது.

Gas Cylinder - Updatenews360

மார்ச் மாதம் மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதம் முதல் வாரம் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த 1-ந் தேதி முதல் வீட்டு உபயோக மானிய கேஸ் சிலிண்டரின் விலை தமிழகம் முழுவதும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சென்னை நகரில் மிக அதிகபட்சமாக ஒரு சிலிண்டரின் விலை 850 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. பிற மாநிலங்களிலும் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

1.90 கோடி கேஸ் இணைப்பு

பல நூற்றாண்டுகளாக விறகுகள், நிலக்கரி பயன்படுத்தப்பட்டு சமையல் வேலைகள் நடந்தது. பெட்ரோலிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு மண்ணெண்ணெய் பயன்பாட்டுக்கு வந்தது. வசதி படைத்தவர்கள் மின்கம்பி அடுப்புகளை பயன்படுத்தினர். கடந்த 25 ஆண்டுகளாக நாடு முழுவதும் வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவது, பரவலாகிப்
போனது.

2014-ல் மத்தியில் மோடி அரசு பதவி ஏற்ற பின்பு, கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புற ஏழை பெண்களின் நலம் கருதி அவர்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கி வருவதால் சமையல் சிலிண்டர்களின் பயன்பாடு மேலும் பல மடங்கு உயர்ந்துவிட்டது.இதன் விலை உயரும் போதெல்லாம் இல்லத்தரசிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது உண்மைதான்.

Indane Gas - Updatenews360

தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 2 கோடியே 40 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 1 கோடி 90 லட்சத்துக்கும் மேலான வீடுகளில் சமையல் கியாஸ் இணைப்புகள் உள்ளன.
இவை தவிர வர்த்தக ரீதியான சமையல் கேஸ் இணைப்பை 45 லட்சம் பேர் வரை பெற்றுள்ளனர், என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

சமையல் கேஸ் என்பது, இன்று அனைத்து தரப்பினராலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது, என்பதால் அவ்வப்போது உயர்த்தப்படும் சிலிண்டர் விலை குடும்பத் தலைவிகளுக்கு பணச் சுமையை ஏற்படுத்தும் ஒன்றுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்னும் விலை குறைப்பில்லை

இதுகுறித்து இல்லத்தரசிகள் பேசும்போது, “கொரோனா ஊரடங்கு காலத்தில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை. வீட்டு வாடகை பள்ளி, கல்லூரி கட்டணம் போன்றவற்றிற்கு அதிகம் செலவிட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இன்று அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்ட கேஸ் சிலிண்டர்களின் விலையை அடிக்கடி உயர்த்துவது நியாயமில்லை. ஏனென்றால் இதனால், அதிகம் பாதிக்கப்படுவது, ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும்தான்.

இதே சூழல் நீடித்தால் அந்தக் காலத்தில் இருந்தது போல் நாங்கள் விறகு அடுப்புகளை தேடித்தான் போக நேரிடும்.

பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை திடீர் திடீரென அதிகரிக்கிறது. எதையுமே எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

Stalin Olympic- Updatenews360

எனவே மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், மானிய சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை குறைக்கவேண்டும். தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதாக கூறினார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை அதுபற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அதேபோல் குடும்பத் தலைவிகளின் நிதிச் சுமையை குறைத்திடும் விதமாக 1000 ரூபாய் மாதாந்திர உரிமைத் தொகை தரப்படும் என்றும் சொன்னார்கள்.

அதேபோல் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் தருவதாக திமுக வாக்குறுதி கொடுத்தது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை அடிக்கடி உயர்வதால் இந்தத் தொகையை குடும்பத் தலைவிகளான எங்களுக்கு விரைவில் கொடுத்தால் சுமை வெகுவாக குறையும்.

பொதுவாக 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 10 சிலிண்டர்கள் வரை தேவைப்படும். அவ்வப்போது கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் கொடுப்பதை விட 10 சிலிண்டர்களுக்கு கணக்கிட்டு மொத்தமாக 1000 ரூபாயாக குடும்பத் தலைவிகளின் வங்கிக்கணக்கில் தமிழக அரசு
முன்கூட்டியே செலுத்தி விடலாம்.

ஏனென்றால் தனித்தனியாக வாங்கும் சிலிண்டர்களை கணக்கிட்டு பணம் கொடுப்பதை விட மொத்தமாக ஒரு வருடத்திற்கான தொகையை ஒதுக்கிவிட்டால் அரசுக்கும் பணிச் சுமை வெகுவாக குறைந்துவிடும். இதனால் கேஸ் சிலிண்டர் மானியம் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் குடும்பத்தலைவிகள் அனைவரும் உள்ளனர்” என்று குறிப்பிட்டனர்.

சிலிண்டரும்… பெண்களின் ஆயுட்காலமும்..

குடும்பத் தலைவிகள் வைத்துள்ள கோரிக்கைகளில் ‘நாங்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்த நேரிடும்’ என்பதை மருத்துவ நிபுணர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

“30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்தப்படுவதும், கிராமங்களில் விறகு மற்றும் நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்துவதுதான் பிரதானமாக இருந்தது.

இதிலிருந்து எழும் புகையை பெண்கள் சுவாசிக்க நேர்ந்ததால், அவர்களுடைய நுரையீரல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் மருத்துவ செலவிற்காகவே மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டிய நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பெண்கள் மூச்சு குழாய் அடைப்பு நோயால் உயிரையும் இழந்தனர்.

ஆனால் இன்று சமையல் கேஸ் பரவலாக புழக்கத்திற்கு வந்துவிட்ட பின்பு, பெண்கள் நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளாவது பெரிதும் குறைந்து போய்விட்டது. இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 68. இது பெண்களுக்கு 71 ஆக உள்ளது. பெண்களின் சராசரி ஆயுட்காலம் அதிகமாக உள்ளதற்கு சமையல் கேஸ் சிலிண்டர்களும் ஒரு காரணம்.

குடும்பத் தலைவிகள் மத்திய, மாநில அரசுகளிடம் சமையல் கேஸ் விலையை குறைக்க என்ன கோரிக்கை வேண்டுமாலும் வைத்து விட்டுப் போகட்டும். அது அவர்களுடைய உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது.

அதேநேரம் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அவர்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும்.
விறகு அடுப்புக்கு போவோம் என்று கூறுவதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். 30 வயதைக் கடந்த இன்றைய குடும்பத்தலைவிகள் தங்களுடைய அம்மா அல்லது பாட்டிமார்களிடம் விறகு அடுப்பால் பட்ட அவஸ்தையை கொஞ்சம் காது கொடுத்து கேட்டுப் பார்த்தால் உண்மை நிலவரம் தெரியும்.

2 பாக்கெட் சிகரெட் பிடிப்பதற்கு சமம்

காலை 6 மணிக்கு சமையலை தொடங்கினால் 9 மணிக்குத்தான் முடிப்பார்கள். பிறகு மதியம் இரண்டரை மணி நேரம் சமையல் கட்டில் உட்காருவார்கள். இரவில் ஒரு இரண்டரை மணி நேரம்.
இப்படி ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அவர்கள் ஊதுகுழாயை கையில் வைத்துக் கொண்டு புகை மண்டலத்துடன் போராடுவார்கள். இது, ஒரு நாளைக்கு தொடர்ச்சியாக 2 பாக்கெட் சிகரெட் பிடிப்பதற்கு சமம்.

Smoking_UpdateNews360

இன்று இந்த 3 நேர சமையல் வேலைகளும் மூன்றே மணி நேரத்திற்குள் எந்த புகை வெளியேற்றமும் இல்லாமல் எளிதாக நடந்து முடிந்து விடுகிறது. அதனால் விறகு அடுப்புக்கு போவோம் என்று சிந்திப்பதெல்லாம் வீண் பேச்சு.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் குடும்பத் தலைவிகளுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு இருக்கலாம். ஆனால் அவர்களின் உடல் நலம் கேஸ் சிலிண்டர் பயன் பாட்டால் பாதுகாக்கப்படுகிறது என்பதே மருத்துவம் கூறும் உண்மை” என்று அந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

Views: - 186

0

0