மதராசி என்பதற்கு முன்பாகவே நாங்க திராவிடர்கள்.. திமுக – பாஜக மோதலுக்கு இடையே ஸ்கோர் செய்யும் காயத்ரி ரகுராம்..!!

Author: Babu Lakshmanan
6 May 2023, 5:03 pm
Quick Share

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியிருக்கையில், தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது :-திராவிட மாடல் என்ற ஒன்று இல்லவே இல்லை. காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியே திராவிட மாடல். ஒரே நாடு, ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல். சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடலின் நோக்கம். ஆளுநர் மாளிகை கணக்கு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது அனைத்தும் அப்பட்டமான பொய்.

தமிழகத்தில் தமிழை தவிர மற்ற மொழிகளை அனுமதிப்பதில்லை. ஆளுநர் ஒன்றும் ராஜா அல்ல ; ராஜ்பவன் என்ற ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்ற யோசித்து வருகிறேன். காலணியாதிக்கக் காலங்களில் கொண்டுவரப்பட்ட ராஜ்பவன் என்பதற்கு பதிலாக லோக் பவன் (மக்கள் இல்லம்) என அழைக்க விரும்புகிறேன். முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த மனிதர்; அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது, என தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து, அடுத்தடுத்து பதிலடி கொடுத்து வருகின்றன. அதேவேளையில், ஆளுநருக்கு ஆதரவாகவும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது, “திராவிடம் என்ற வார்த்தை தேசிய கீதத்தில் உள்ளது, தமிழ் தாய் வாழ்த்தில் உள்ளது. திராவிடம் வெறுக்க முடியாது, அது காலாவதியாகவில்லை. எங்களை தென்னிந்தியர்கள் என்று அழைப்பதற்குப் பதிலாக, எங்களை மதராசி என்று அழைப்பதற்குப் பதிலாக, நான் எப்போதும் திராவிடர் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். நிச்சயமாக நான் தமிழனாக பெருமை கொள்கிறேன். இந்தியனாகவும் அழைக்க பெருமை கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவுக்கு எதிராகவும், ஆதராகவும் கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 272

0

0