நாங்க ஒன்னும் முட்டாள் இல்ல… இனி எந்த மகளுக்கும் இப்படி நடக்கக் கூடாது : திமுகவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்..!!

Author: Babu Lakshmanan
23 October 2021, 5:59 pm
Quick Share

சென்னை: தன்னை ஆபாசமாக சித்தரித்த தி.மு.க பிரமுகர்களை தற்காலிகமாக மட்டுமே கட்சியில் இருந்து நீக்கம் செய்ததற்கு பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது வீடியோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதாகவும், அந்த வீடியோவை நீக்குவதோடு, அதனை பதிவிட்ட தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் காயத்ரி ரகுராம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், பெண்களை தொடர்ந்து அவமதித்து வரும் ஜெயச்சந்திரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

அதோடு, ஜெயச்சந்திரன் விடுத்த பதிவை முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் டேக் செய்து, “இன்று நான் நாளை உங்கள் மகளுக்கு செய்வார்கள். முதல்வர் அவர்களே தங்களின் மகளுக்கு இவ்வாறு நிகழ்ந்திருந்தால் நீங்கள் கை கொடுப்பீர்களா? முதலமைச்சர் ஸ்டாலின், தி.மு.க ஒழிக,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இன்று ஓடும் பேருந்தில் ஏறி பெண் பயணிகளின் குறைகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார். இது தொடர்பான பதிவை குறிப்பிட்டும் சில கருத்துக்களை காயத்ரி ரகுராம் வெளியிட்டிருந்தார். அதாவது, “எங்கள் வேண்டுகோள்- ஜெயச்சந்திரன் ராமலிங்கம் மற்றும் ஈஸ்வரன் போன்ற திமுக தொண்டர்கள் பேருந்தில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. பெண்களை Eve teasing மற்றும் மோசமான கோணத்தில் மறைக்கப்பட்டுள்ள கேமரா இது போன்ற திமுக தொண்டரை முதலில் கைது செய்யுங்கள்,” என அடுத்தடுத்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இதைத் தொடர்ந்து, பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் குறித்து கொச்சையாக டுவிட்டரில் பதிவிட்ட மதுரை தெற்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப துணை அமைப்பாளரான ஜெயச்சந்திரன் அப்பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தொழில்நுட்ப செயலாளரான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், பெண்ணை இழிவுப்படுத்திய நபர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்வதா…? என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நடவடிக்கைக்கு காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவுகளில், “ஏன் தற்காலிகமாக நீக்கம்? தமிழ்நாட்டுக்கு ஜெயச்சந்திரன் மற்றும் ராமலிங்கம் போன்றவர்கள் பயங்கரமான வக்கிரங்கள் மோசமான சேவை நாங்கள் விரும்பவில்லை.. எனக்கு நீதி வேண்டும். அவரை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஜெயச்சந்திரன் மற்றும் ராமலிங்கம் கட்சியில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும். அத்தகைய தற்காலிக நீக்கம் மூலம் உங்கள் கண்களைத் துடைக்கலாம். நாங்கள் முட்டாள்கள் இல்லை சார். பெண்களின் உடல் என்பது கருத்து சொல்லி விட்டு விலகும் ஒரு பொருளல்ல மற்றும் நிர்ணயிக்கப்பட வேண்டிய விகிதம் அல்ல. வக்கிரமான அர்த்தத்தில் வீடியோவைப் பகிர்வதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் எந்த மகளுக்கும் இப்படி நடக்கக் கூடாது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராமின் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 256

0

0