திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலைதான்… ஓரிரு நாட்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பற்றி அறிவிப்பு : ஜிகே வாசன்

Author: Babu Lakshmanan
19 January 2023, 4:28 pm
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி மட்டுமே இலக்கு எனவும், ஓரிரு நாட்களில் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு வரும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், அதிமுக உடன் சுமூகமான உறவுடன் தொடர்வதாகவும், தற்போதைய அரசியல் சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி மிக முக்கியமானது எனவும் கூறினார்.

அதிமுக மூத்த தலைவர்களுடன் வெற்றிக்கான யூகங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை, இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தியுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் கூட்டணி கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்படும், என வாசன் தெரிவித்தார்.

தொடர்ந்து, பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சின்னம் குறித்து தற்போது பேச வேண்டிய சூழல் இல்லை எனவும், வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு சின்னம் குறித்து முடிவெடுக்கலாம் எனவும் கூறினார்

Views: - 324

0

0