‘ரூ.35 ஆயிரத்தை எடுத்து வைங்க…அப்புறம் சிகிச்சை பண்ற’: கர்ப்பிணியின் உயிரை பணத்திற்கு பணயம் வைத்த பெண் அரசு மருத்துவர்..!!

Author: Aarthi Sivakumar
13 October 2021, 9:14 am
Quick Share

திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் கர்ப்பிணிக்கு மருத்துவம் பார்க்காமல் பணத்திற்காக வலியால் துடிக்கவைத்து, தான் பணிபுரியும் தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்பத்தினருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடுமலை அரசு மருத்துவமனைக்கு ஆரம்ப சுகாதார ஊழியர்களால் பரிந்துரைக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு, கர்ப்பிணியை பரிசோதித்த மருத்துவர் ஜோதிமணி குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால், வலியால் துடிதுடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து சிசுவை அகற்றாமல் 4 நாட்களாக காலதாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், வலியால் துடிதுடித்த ராஜராஜேஸ்வரிக்கு உடனடியாக குழந்தையை அகற்றுமாறு குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு, அருகிலுள்ள ஸ்ரீவிநாயக் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர் ஜோதிமணி பரிந்துரைத்துள்ளார். இதனால் வேறு வழியின்றி மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, ராஜராஜேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசு மருத்துவமனை மருத்துவர் ஜோதிமணியே வருவதை கண்டு திகைத்து போயுள்ளனர். அதுகுறித்து, விசாரிக்கும் போது, அந்த மருத்துவமனையில் தனக்கென ஒரு தனி அறையுடன் பகுதி நேரமாக மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

வயிற்றில் இறந்த சிசுவை அகற்ற ரூ.35,000 கட்டணமாக செலுத்தினால் உடனே மருத்துவம் பார்ப்பதாக ஜோதிமணி கறார் காட்டியுள்ளார். இந்த, சிகிச்சையை அரசு மருத்துவமனையிலேயே செய்திருக்கலாமே என கேட்டபோது, அதெல்லாம் இப்ப முக்கியமா, ஆப்பரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்கட்டுமா, வேண்டாமா என அலட்சியமாக கேட்டுள்ளார்.

வலியில் போராடும் கர்ப்பிணியின் உயிரை காப்பாற்றுவதுதான் முக்கியம் என கருதிய குடும்பத்தினர் ஜோதிமணி கேட்ட 35 ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்தியுள்ளனர். பணத்தை கட்டியதும் அறுவை சிகிச்சை உடனடியாக நடந்துள்ளது.

அரசு மருத்துவர் ஜோதிமணியின் இந்த மனிததன்மையற்ற இந்த செயல் குறித்து சமூக வலைதளத்தில் கர்ப்பிணியின் உறவினர்கள் செய்தி பரப்பவே, அந்த செய்தி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, முதற்கட்ட நடவடிக்கையாக மருத்துவர் ஜோதிமணியை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்ட ஆட்சியர், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து மருத்துவம் பார்க்க முடியாத ஏராளமான நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஆயிரக்கணக்காக அரசு மருத்துவர்களுக்கு மத்தியில், பணத்தாசை பிடித்து நோயாளிகளின் உயிரில் விளையாடும் இதுபோன்ற மருத்துவர்களும் குறிப்பாக பெண் மருத்துவரே இழிசெயலில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக பெண்ணின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Views: - 929

0

0