அரசு பள்ளியில் 1,6,9, வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான தேதி வெளியீடு..!

11 August 2020, 2:23 pm
Sengottaiyan 03 updatenews360
Quick Share

சென்னை : அரசு பள்ளிகளில் 1,6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதேபோல, அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுத்தேர்வு எழுதுபவர்கள் மற்றும் பிற மாணவர்கள் என அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்து விட்ட நிலையில், மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, நாடு முழுவதும் வரும் டிசம்பர் மாதம் வரையில் பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து சென்னை தலைமை செயலகதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமே இல்லை.

அரசு பள்ளிகளில் 1,6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை வரும் 17ம் தேதி முதல் நடக்கும். 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் தொடங்கும். தனியார் பள்ளிகள் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மாணவர் சேர்க்கையை இணையதளம் மூலம் நடத்த வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் பள்ளி விட்டு பள்ளி மாறுதல்களையும் வரும் 17ம் தேதி முதல் மேற்கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.