மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்: தமிழக பாராலிம்பிக் சங்கம் வேண்டுகோள்..!!

Author: Aarthi Sivakumar
6 September 2021, 9:14 am
Quick Share

சென்னை: மாற்றுத்திறனாளிகள் விளையாட்டை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு சென்னையில் அளித்த பேட்டியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், குரூப் 1 பிரிவில் வேலை, தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனுக்கு அங்கீகாரம், வீரர்களுக்கு தொடர் பயிற்சி உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, தமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவர் சந்திரசேகருடன் இணைந்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய மாரியப்பன் தங்கவேலு, தங்கம் வெல்லும் குறிக்கோளுடன்தான் சென்றேன். ஆனால் மழையால் களம் ஈரமாக இருந்ததால் சரியாக தாண்ட முடியவில்லை. நிச்சயம் அடுத்த முறை தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன். சாதாரண விளையாட்டுகளுக்கு நல்ல முக்கியத்துவம் தருவதுபோல, பாரா விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர கேட்டுக் கொண்டுள்ளேன். அதன் மூலம் பாரா விளையாட்டு போட்டிகளிலும் நிறைய தடகள வீரர்கள் உருவாவார்கள் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவர் சந்திரசேகர் மாற்றுத்திறனாளி வீரர்களை வெகுவாக ஊக்கப்படுத்துவதாகவும், ஒலிம்பிக் வீரர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை பாராலிம்பிக் வீரர்களுக்கும் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, பேசிய தமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவர் சந்திரசேகர் தங்களது அசோசேசியன் மூலம் திறமைமிக்க வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றினால், இதுபோல 100 மாரியப்பனை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Views: - 288

0

0